தினமலர் 28.07.2010
ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு பணிக்கு ரூ. 5.57 கோடி ஒதுக்கீடு
ராமநாதபுரம்: “”ராமநாதபுரம் நகராட்சி ரோடு பணிகளை மேற்கொள்ள 5.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக,’’ கலெக்டர் ஹரிஹரன் கூறினார்.
மேலும்அவர் கூறியதாவது: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் “இளவட்டம்‘ திருவிழாவையொட்டி, ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டு அரங்கில் இன்று 31 கல்லூரிகளிலிருந்து 5000 மாணவ மாணவிகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழக கல்லூரிகளில் 986 செஞ்சுருள் சங்கங்கள் துவங்கப் பட்டு வெற்றிகரமாக செயல் பட்டு வருகிறது. இளைஞர் கொண்டாட் டத்தை முன்னிட்டு புதிதாக 500 சங்கங்கள் துவங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் எச்.ஐ.வி., பாதித்தோர் ஆண் பெண் குழந்தைகள் என 627 பேர் கூட்டுமருந்து சிகிச்சை மையம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவு பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களிலும் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாக உள்ளனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் ரோடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள 5.57 கோடிரூபாய் ஒதுக்கி,முதற்கட்டமாக சர்ச் முதல் சென்டர் கிளாக் , வழிவிடு முருகன் கோயில் முதல் சென்டர் கிளாக் வரை ரோடு பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரய்யாகோயில் ஸ்டாப் வழியாக சக்கரக்கோட்டை கண்மாய்க்கு மழைநீரை கடத்த 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பைப் பதிக்கும் பணிக்கு நிதி வழங்க அமைச்சர் தங்கவேலன் ஒப்புதல் அளித்துள்ளார்,என்றார்.