தினமலர் 03.09.2010
ரூ.55.74 கோடியில் 7,432 வீடுகள்:மாவட்டம் முழுவதும் கட்ட முடிவு
திருப்பூர்:””திருப்பூர் மாவட்ட அளவில், 55.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 4,258 வீடுகள், இலவச கான்கிரீட் வீடு திட்டத்தில் 3,174 வீடுகள் கட்டப்பட உள்ளன,” என்று திட்ட அலுவலர் ரேணுகாதேவி தெரிவித்துள்ளார்.இலவச கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மூலமாக, திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 181 குடிசைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதில், திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு 7,522 குடிசைகள் கான்கிரீட் வீடு திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன. மீதியுள்ள குடிசைகளில் 3,692 குடிசைகள் நிபந்தனையுடன் தகுதியானவை என்றும், 3,967 குடிசைகள் தகுதியற்றவை என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
தகுதி வாய்ந்த 7,522 குடிசைகளில், நடப்பு நிதியாண்டில் 3,174 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படுகின்றன. அதற்கான 25 சதவீத நிதியாக, நான்கு கோடியே 89 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 56 மூட்டை சிமென்ட், கம்பிகள் மற்றும் ஜன்னல், கதவுகள், கழிப்பறைக்கு தேவையான “பேஸ்–இன்‘கள், அந்தந்த ஒன்றியங்கள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கான்கிரீட் வீடு திட்ட பணி, கடந்த ஆகஸ்ட் 15 முதல் துவங்கியுள்ளது. மானியத்தொகையில், ஒவ்வொரு காலாண்டுக்கும், கட்டுமான பொருள் மதிப்பை சேர்த்து, 25 சதவீத தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கும், 75 ஆயிரம் ரூபாய் மானியம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ரேணுகாதேவி கூறியதாவது:கான்கிரீட் வீடு திட்டத்தில் 3,174 குடிசைகள் நடப்பாண்டில் தேர்வாகியுள்ளன. அதற்காக, 25 சதவீத நிதியாக 4.90 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. தற்போது, குடிசைகளை பிரித்து, நிலத்தை அளந்து அளவீடு செய்யப்படுகிறது. விரைவில் பணிகள் துவங்கிவிடும்.
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில், மாவட்ட அளவில் 4,258 பயனாளிகள் நடப் பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர் களுக்கும், தலா 75 ஆயிரம் ரூபாய் மானியம் ஒதுக்கப்படும். வழக்கமான அளவுகளில், மாடல்களில் தொகுப்பு வீடுகள் கட்டப்படும்.கான்கிரீட் வீடு கட்டும் போது, அரசு அறிவித் துள்ள மாடலில், 75 ஆயிரம் ரூபாய் மானியத் தொகையில் கட்டப்படும். வழக்கம்போல், அந்தந்த ஒன்றியங்கள் வாயிலாக, சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் வழங்கப்படும். அதற்காக, மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.