தினகரன் 08.06.2010
ரூ.56.13 கோடியில் பாதாள சாக்கடை பணி துவங்கியது
கோவை, ஜூன் 8:கோவையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 56.13 கோடி ரூபாய் செலவில் நேற்று துவங்கியது.
கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு ராமலிங்க ஜோதி நகரில் 56.13 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணி (பகுதி 2) துவக்க விழா நேற்று நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், செயற்பொறியாளர்கள் லட்சுமணன், திருமாவளவன், கவுன்சிலர்கள் மீனா, ஹேமலதா, கலையரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை நகரில் ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் 377.13 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 6 பகுதிகளாக (பேக்கேஜ்) நடக்கிறது.
தற்போது இரண்டாவது பகுதிக்கான திட்டப்பணிகள் துவங்கியுள்ளது. கோவை மாநகராட்சியின் 3 மற்றும் 7வது மண்டலத்தில் சேகரிக்கப்படும் கழிவு நீர் நஞ்சுண்டாபுரம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. உக்கடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் இருக்கிறது.