தினமணி 22.07.2009
சி.எம்.டி.ஏ.வின் ரூ. 56.61 கோடி சொத்துகள் முடக்கம்
சென்னை, ஜூலை 21: கோயம்பேடு, மறைமலை நகர், மணலி புதுநகர் ஆகிய இடங்களில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) சொந்தமான ரூ. 56.61 கோடி மதிப்பிலான சொத்துகள் வருவாய் இனங்களாக பயன்படுத்தப்படாமல் முடங்கியுள்ளது.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சி.எம்.டி.ஏ.வின் 2007-2008 நிதி ஆண்டிற்கான தணிக்கையில் இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:
கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் காய்கறி, மலர், கனி ஆகிய பிரிவுகளுக்காக 2,679 அங்காடிகளும், உணவகங்கள் உள்ளிட்டவைகளுக்காக 515 அங்காடிகளும் கட்டப்பட்டன. இதில் 114 அங்காடிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.
24-7-2007-ல் நிறைவேற்றப்பட்ட சி.எம்.டி.ஏ. தீர்மானத்தின்படி காலியாக உள்ள இந்த அங்காடிகளின் மதிப்பு ரூ. 41.78 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மறைமலை நகரில் ஒரு வணிகமனை உள்பட கூடலூர் திட்டத்தில் உருவாக்கப்பட்ட 174 மனைகள் ஒதுக்கப்படாமல் உள்ளன. இவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ. 13.21 கோடி.
மணலியில் 3 கடைகள், 11 வணிக மனைகள் உள்பட 85 மனைகள் உருவாக்கப்பட்டு உரியவர்களுக்கு ஒதுக்கப்படாமல் உள்ளன. இவற்றின் இப்போதைய மதிப்பு ரூ. 1.62 கோடி.
இந்த மூன்று இடங்களிலும் உரியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் சி.எம்.டி.ஏ.வுக்கு ரூ. 56.61 கோடி வருவாய் இனமாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இவை உரியவர்களுக்கு ஒதுக்கப்படாததால் சி.எம்.டி.ஏ.வின் ரூ. 56.61 கோடி மதிப்பிலான சொத்துகள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணலியில்…: ரூ. 30 கோடியில் மனைப் பிரிவு மற்றும் உடன் குடியேறும் வீடுகளடங்கிய மணலி புதுநகர் திட்டம் சி.எம்.டி.ஏ.வால் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இங்கு குறைந்த வருவாய் பிரிவினருக்காக உருவாக்கப்பட்ட வீடுகள் தோராய விலை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அறிவுரைப்படி 1979 மற்றும் 1981-ம் ஆண்டு விலையில் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள நடுவரை நியமித்தது.
19-9-1994-ல் நடுவர் அளித்த தீர்ப்பு உடனடியாக அமலாக்கப்படவில்லை. அடுத்தடுத்த மேல்முறையீடுகளுக்கு பின்னர் நடுவர் தீர்ப்பு இறுதியானது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தியதில் சி.எம்.டி.ஏ.வுக்கு ரூ. 1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.ஏ. அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ. 12 கோடி நிலத்தை மீட்க…: மறைமலை நகர் திட்டம் நின்னகரை பகுதியில் 5.71 ஏக்கர் நிலம் மகளிர் பாலிடெக்னிக் கட்டுவதற்காக ஆஸ்ரமம் ஒன்றுக்கு குத்தகைக்கு 1988-ம் ஆண்டு விடப்பட்டது. 30 ஆண்டு குத்தகை காலத்தில் 20 ஆண்டுகள் ஆகியும் நிலம் உரிய தேவைக்கு பயன்படுத்தப்படவில்லை.
எனவே, நிலத்தை மீட்டு இப்போதைய மதிப்பின் படி ரூ. 12.66 கோடிக்கு விற்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதேபோல, மறைமலை நகரில் முன்னாள் உரிமையாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சி.எம்.டி.ஏ.வின் ரூ. 4.96 கோடி மதிப்புள்ள நிலங்கள் முடங்கியுள்ளன. செயலாக்கம் இல்லாத இந்த சொத்துக்களை மீட்டு வருவாய் இனங்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவும் தணிக்கை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.