நெல்லிக்குப்பம் நகராட்சியில் 573 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து. பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தகவல்
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போது மக்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் வணிகர்களிடமும், வியாபாரிகளிடமும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் கடைகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பிளாஸ்டிக் கை பைகளை பயன்படுத்துவதற்கும் நகராட்சி சார்பில் ஈ.ஐ.டி.பாரி மற்றும் லோட்டே மிட்டாய் தொழிற்சாலை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா தலைமை தாங்கி பேசியதாவது:–
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 573 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளிலிருந்து பிளாஸடிக் பொருட்களை தரம் பிரித்து பிளாஸ்டிக் சாலை மற்றும் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே விழிப்புணர்வு
இது மட்டுமின்றி ஈ.ஐ.டி. பாரி சார்பில் 10 ஆயிரம் துணி பைகள் தயார் செய்யப்பட்டு இலவசமாக பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. இவ்வாறு பேசினார் இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். பின்னர் ஈ.ஐ.டி. பாரி துணை பொது மேலாளர் சுனில்வர்கீஸ், லோட்டே மிட்டாய் தொழிற்சாலை மேலாளர் விஜயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் கவுன்சிலர்கள் கலியபெருமாள், வெங்கடேசன், தலைமை ஆசிரியர் அதிசயராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மடிவில் துப்புரவு அலுவலர் பரமசிவம் நன்றி கூறினார்.