தினகரன் 13.09.2010
துணை முதல்வர் இன்று திறக்கிறார் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ5.80 கோடியில் 1109 கடைகள்
சென்னை, செப்.13: நடைபாதை வியாபாரிகளுக்காக முதல் முறையாக, சென்னை மாநகராட்சி சார்பில் பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் ஆகிய இடங்களில் ரூ5.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை, செப்.13: நடைபாதை வியாபாரிகளுக்காக முதல் முறையாக, சென்னை மாநகராட்சி சார்பில் பாண்டிபஜார், அயனாவரம், ராயபுரம் ஆகிய இடங்களில் ரூ5.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, முக்கிய வணிக பகுதிகளில் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அழகிய சலவை கற்கள், டைல்ஸ்கள் பதிக்கும் பணிகளும் நடக்கிறது. பார்வையற்றவர்கள் நடைபாதையில் நடந்து செல்லும் வகையில் அவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட சிறப்பு டைல்ஸ்கள் முக்கிய சாலைகளின் நடைபாதைகளில் பதிக்கப்பட்டுள்ளன.
தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நீண்ட காலமாக நடைபாதைகளில் கடைகளை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கி, நடைபாதை கடைகளை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, பாண்டிபஜாரில் மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மார்க்கெட்டை இடித்து விட்டு ரூ4.30 கோடி செலவில் நடைபாதை வியாபாரிகளுக்காக பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அயனாவரம், ராயபுரம் ஆகிய இடங்களில் நடைபாதை வியாபாரிகளுக்காக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
பாண்டிபஜாரில் ரூ4.30 கோடி செலவில் தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் 18,758 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் 3 லிப்ட், 36 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரை தளத்தில் 170 கடைகள் மற்ற 3 தளங்களிலும் 474 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உஸ்மான் சாலை, பாண்டிபஜாரில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்படும். நீதிமன்றம் பரிந்துரைத்த நடைபாதை கடைகள் தவிர மற்ற நடைபாதை கடைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும்.
இது தவிர அயனாவரம், பாலவாயல் சாலையில் நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ1.23 கோடி செலவில் 16,400 சதுர அடி பரப்பளவில் 332 கடைகளும், ராயபுரம், எம்.சி.சாலையில் 2,615 சதுர அடி பரப்பளவில் 133 கடைகள் ரூ27 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ளன. இந்த 3 இடங்களிலும் ரூ5.80 கோடி செலவில் 1,109 கடைகள் முதல் முறையாக நடைபாதை வியாபாரிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (இன்று) மாலை திறந்து வைக்கிறார். நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் வழங்குகிறார்.
நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு இந்த பகுதிகளில் மீண்டும் நடைபாதை களை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால், அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றுவார்கள். இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.