தினமணி 11.01.2010
குறு, சிறு தொழில்கள் மூலம் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர்
விருதுநகர், ஜன. 10: நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மூலம் சுமார் 6 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய இணையமைச்சர் தின்ஷா ஜே. படேல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே ராமசாமிபுரத்தில் தீப்பெட்டிக் குழுமத்தின் பொதுப் பயன்பாட்டு மையத்தை ஞாயிற்றுக்கிழமை துவக்கிவைத்துப் பேசியபோது, அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
மகளிர் சுய உதவி குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி மத்திய இணையமைச்சர் பேசியதாவது: நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதில் இரண்டாம் இடம் வகிக்கின்றன. இந்தத் துறையில் உள்ள 2.60 லட்சம் நிறுவனங்கள் மூலம் 6 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.
இந்தத் துறை கிராமப்புறம் மற்றும் சிறு நகர்ப்புறங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை அளிப்பதுடன், இப் பகுதியில் பொருளாதாரம் மேம்பட ஒரு கருவியாக விளங்குகிறது. குறு, சிறு மற்றும் மத்திய நிறுவனங்களில் வளர்ச்சிக்காக தாராளமயம் மற்றும் உலகமயமாதல் ஆகியவற்றை மனதில் கொண்டு மத்திய அமைச்சகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியைச் சமாளிக்க தேசிய உற்பத்தி போட்டி திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
உலகச் சந்தையில் போட்டியைச் சமாளிக்க 11-வது ஜந்தாண்டுத் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 தீப்பெட்டி குழுமப் பகுதிகளான குடியாத்தம், சாத்தூர், விருதுநகர், கழுகுமலை, கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் பொதுப் பயன்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு பொதுப் பயன்பாட்டு மையத்துக்கும் ரூ. 1.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு நிறுவனங்கள் குழும வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பொதுப் பயன்பாட்டு மையம் அமைக்க 11 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்டுள்ள 11 திட்டங்களில் விருதுநகர் பொதுப் பயன்பாட்டு மையம் முதலில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதம் உள்ளவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் 3,537 தீப்பெட்டி உற்பத்தி மையங்கள் உள்ளன. மொத்த உற்பத்தியில் கையால் செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகளின் உற்பத்தி மட்டும் 39 சதவீதம். கையால் தீப்பெட்டி செய்யும் தொழில் மூலம் சுமார் 2 லட்சம் ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்றார் படேல்.