தினமலர் 18.03.2010
பாழடைந்த சத்துணவு கூடத்தை புதுப்பிக்க ரூ.6லட்சம் ஒதுக்கீடு முந்துபவர்களுக்கு முன்னுரிமை
அரக்கோணம்:வேலூர் மாவட்டத்தில் பாழடைந்த நிலையில் உள்ள சத்துணவு கூடங் களை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஒன்றியம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களில் சில பாழடைந்த நிலையிலும், சுகாதாரம் இல்லாமலும் நிலை யிலும் உள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் போது, எதிர்பாராத விதமாக சாம்பாரில் பல்லி, சாதத்தில் புழு, பூச்சிகள் விழுந்து விடுகின்ற. இந்த உணவுகளை மாணவர்களுக்கு பரிமாறும் போது வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 60 பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களை புதுப்பிக்க தலா 10 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் தலா 2 பள்ளிகள் வீதமும், மீதமுள்ள 20 பள்ளிகள், நகராட்சி பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதியை பெற, அந்தந்த பி.டி.ஓ., அலுவலக சத்துணவு பிரிவு அதிகாரிகள், சம்பந்தப் பட்ட சத்துணவு கூடத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, அறிக்கையை மாவட்ட திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இந்த நிதி ஒதுக்கீடு, முதலில் முந்துபவர்களுக்கே அதாவது முதலில் அறிக்கை அனுப்புவர்களுக்கே கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட அதிகாரிகள், பாழடைந்த சத்துணவு கூடங்களுக்கு ‘விசிட்‘ செய்யும் பணியில் இறங்கியுள்ளனர்.