தினமலர் 08.04.2010
மருத்துவமனை விரிவாக்க கட்டடத்திற்கு கூடுதலாக ரூ.6 கோடி ஒதுக்கீடு: அடுத்த மாதம் பணி முடியும்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டடப் பணிகளை விரைவாக முடிக்க, கூடுதலாக ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. ‘இடநெருக்கடியில் தவிக்கும் இம்மருத்துவமனைக்கு, காலியாக இருந்த கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்டை ஒதுக்க வேண்டும்‘ என, தினமலர் இதழ் பலமுறை சுட்டிக் காட்டியது. இதன் எதிரொலியாக, இந்த இடம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாநகராட்சி ஒதுக்கியது.விரிவாக்க கட்டட பணி 3.12 ஏக்கரில் 2007ல் துவங்கியது. மொத்தம் 2,54,905 சதுர அடியில் 22.6 கோடி ரூபாயில் 5 மாடிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. கீழ்தளத்தில் ‘பார்க்கிங்‘ வசதியும், தரைத்தளத்தில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, நுண்கதிர் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ அறைகள், உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு அறைகளும் கட்டப்பட்டுள்ளன. முதல்தளத்தில், நுண்கதிர் பிரிவுகள், விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான ‘சிடி‘ மற்றும் அல்ட்ரா ஸ்கேன் மையங்கள், ஆப்பரேஷன் தியேட்டர்கள் அமைகின்றன. இரண்டாம் தளத்தில் பரிசோதனைக் கூடம், திசு ஆய்வுக்கூடம், ஆப்பரேஷன் தியேட்டர்கள், கருத்தரங்கு கூடமும், மூன்றாம் தளத்தில் நுண் உயிரியல் பிரிவு, மருத்துவ பதிவேடு அறை, டெலிகான்பிரன்சிங் ஹால், கருத்தரங்கு கூடமும் அமைக்கப்பட்டு வருகின்றன.
கட்டுமான பணியை மே இறுதிக்குள் முடித்து, ஜூனில் திறப்பு விழா நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் காரணமாக, பணிகள் தாமதமாகும் அபாயம் உள்ளது. ‘இதனால் கூடுதலாக ஆறு கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்‘ என, அரசிடம் பொதுப்பணித்துறை திட்டஅறிக்கை சமர்ப்பித்தது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து, திட்டமிட்டப்படி அடுத்த மாதம் இறுதியில் கட்டுமான பணி முடிவடையும் எனத் தெரிகிறது.