தினமலர் 20.04.2010
பழநியில் குடிநீர் தட்டுப்பாடு 6 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை : பொதுமக்கள் நகராட்சி முற்றுகை
பழநி : பழநியில் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.சில தெருக்களில் 10 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் காலிகுடங்களுடன் நகராட்சியை முற்றுகையிட்டனர்.பழநி நகராட்சி குடிநீர் ஆதாரமான கோடைகால நீர்த்தேக்கம் முற்றிலும் வற்றிவிட்டது. பாலாறு–பொருந்தலாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. பழநியில் 7 ஆயிரத்து 159 வீட்டு குழாய் இணைப் புகளும், 249 பொதுகுழாய் இணைப்பு களும் உள்ளன. ஒரு நாளைய தேவை 80 லட்சம் லிட்டராகும். நீர்ஆதாரங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் 6 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. அதேசயம் சில தெருக்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை சப்ளையாகிறது.
முற்றுகை: 5-வது வார்டு பாரதி தெரு, கம்பர் தெருவில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையாகிறது. இங்குள்ள குடிநீர் மேல்நிலைதொட்டிக்கான மின்பம்ப்கள் பழுதாகியும் சரி செய்யவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சீரான குடிநீர்சப்ளை, மின்பம்ப் உடனடியாக சரிசெய்யப்படும் என நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் உறுதி தரவே அவர்கள் கலைந்தனர்.
பாரதி தெருவை சேர்ந்த நாகவேணி கூறுகையில்,’கடந்த 10 நாட்களாக எங்கள் தெருவில் குடிநீர் சப்ளையில்லை. நகராட்சியில் புகார் தந்து 4 நாட்களாகியும் நடவடிக்கையில்லை. மின்பம்ப் பழுதும் சரிசெய்யவில்லை. பக்கத்து தெருவினர் குடிநீர் பிடிக்க அனுமதிப்பதில்லை,’ என்றார்.
நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், ‘அணையில் உள்ள தண் ணீர் அளவை கணக்கில் கொண்டு 6 நாட்களுக்கு ஒருமுறை சப்ளை செய்கிறோம். நகரில் 129 மின் பம்ப்கள் மூலம் தொட்டிகளுக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. 149 அடிகுழாய்களும் பழுதின்றி உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு, சப்ளை குறைபாடு குறித்து 24 மணி நேரமும் நகராட்சியில் புகார் தெரிவிக்கலாம்,’என்றார்.