தினமலர் 29.04.2010
நகராட்சி கடைகளுக்கு ஓசூரில் 6வது முறை ஏலம்
ஓசூர்: ஓசூர் சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஆறாவது முறையாக நகராட்சி புது பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு நடந்த ஏலத்தில் ஆறு கடைகளும், ஒரு ஹோட்டலும் ஏலம் போனது. ஓசூர் நகராட்சி சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 76 கடைகள், இரு ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் கடைகள் கடந்த செப்டம்பர் 25ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து முறை ஏலம் விடப்பட்டது. பல கடைகள் ஏலம் போகவில்லை. நேற்று ஆறாவது முறையாக சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஏலம் நடந்தது.நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கமிஷனர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.இது வரை ஏலம் போகாத 57 கடைகள், ஒரு ஹோட்டல் ஏலம் விடப்பட்டது. இதில், ஏழாம் எண் கடை அதிகப்பட்சமாக ஏலத்தொகையாக 35,500 ரூõபாய்க்கு ஏலம் போனது. இரண்டாம் எண் கடை 19,000 ரூபாய்க்கும், 49ம் எண் கடை 4,250 ரூபாய்க்கும், 50ம் எண் கடை 5,200 ரூபாய்க்கும், 51ம் எண் கடை 4,650 ரூபாய்க்கும், 52ம் நம்பர் கடை 5, 250 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஒரு ஹோட்டல் 34, 200 ரூபாய்க்கு ஏலம் போனது. இது வரை ஆறு முறை ஏலம் நடத்தி மொத்தம் 25 கடைகளும், இரு ஹோட்டல்களும் மட்டும் ஏலம் போய் உள்ளன. இன்னும் 51 கடைகள் ஏலம் போகவில்லை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் கூறும் போது,”மே15ம் தேதிக்குள் கான்டிராக்டர் பஸ் ஸ்டாண்ட் பணியை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பின், அரசிடம் பேசி பஸ்ஸ்டாண்ட் திறப்பு விழா தேதி முடிவு செய்வோம். அதற்குள் கடை ஏலத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை ஏலம்போன கடைகள் நல்ல மாதவாடகைக்கு போய் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, ” என்றார்.