தினகரன் 20.08.2010
போக்குவரத்து மிகுந்த இடங்களில் ரூ6 கோடியில் புதிய சாலைகள் நகராட்சித் தலைவர் தகவல்
பொள்ளாச்சி, ஆக 20: பொள் ளாச்சி நகரில் பல்வேறு இடங்களில் ரோடுகள் பழுதடைந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் ரூ. 6 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் ரோடுகள் போட முடிவு செய்துள்ளதாக நகராட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர்களின் அவசர கூட்டம் தலைவர் ராஜேஸ் வரி தலைமையில் நேற்று நடந்தது. ஆணையாளர் வரதராஜ், துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்களின் விவாதம்:
கவுன்சிலர் மலர்விழி (தி.மு.க.): எனது வார்டுக்குட்பட்ட குமரன் நகரில் இருந்து கல்லுக்குழி வரையில் புதிதாக தார் ரோடு போட முடிவு செய்துள்ளீர்கள். அதேசமயம் கண்ணப்பன் நகரில் இருந்து கல்லுக்குழி செல்லும் ரோடு மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைத்துக் கொடுக்க நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் கவிதா (தி.மு.க.): எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. துப்புரவு பணியாளர்கள் எப்போதாவதுதான் பணிக்கு வருகிறார்கள்? இதுதொடர்பாக சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. பொட்டுமேடு பகுதியில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் தெருவிளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளது. நகரின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எனது வார்டில் போதிய வெளிச்சம் இன்றி பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
கவுன்சிலர் நூல்கடை சேகர் (தி.மு.க.): துப்புரவு பணியாளர்களில் சிலர் பணி நேரத்தில் மது அருந்திவிட்டு போதையில் ஆங்காங்கு படுத்துவிடுகின்றனர். துப்புரவு பணிகளை மேற்கொள்ள அழைத்தால் கவுன்சிலர் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளில் அதிகாரிகள் மெத்தனமாக இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் மீனாட்சி (காங்.,): அண்ணா நகரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை, லாரி மூலம் தண்ணீர் வழங்குவதும் இல்லை. இதனால் அங்கு குழந்தைகளுக்கு உணவு சமைக்க முடியாமல் ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இப்பிரச்னை குறித்து பல மாதங்களாக புகார் செய்தும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகிறீர்கள். ராஜீவ் நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவங்கியதுமே அப்பகுதி அங்கன்வாடி மையத்துக்கு லாரி மூலம் குடிநீர் வங்குவதை நிறுத்தி விட்டீர்கள். குடிநீர் குழாய் பணி முடிவடையும் வரை லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் ராஜேஸ்வரி (தி.மு.க.): நகரின் பல்வேறு இடங்களில் ரோடுகள் பழுதடைந்து வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சுரங்க நடைபாதை பணி, கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பால பணி ஆகியவை நடைபெற்று வருவதால் குறுகலான ரோடுகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே நகரில் அதிகம் பழுதடைந்துள்ள பகுதிகளை தேர்வு செய்து புதிதாக தார் ரோடுகள் போடவும், சிறுபாலங்கள் அமைக்கவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து மிகுந்த முக்கிய ரோடுகளை தேர்வு செய்து ரூ. 6 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கவுன்சிலர்களின் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு பல்வேறு பணிகள் தொடர்பாக அவசரக் கூட்டத்தில் 12 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.