தினகரன் 02.09.2010
ஆரணியில் ரூ6 கோடி மதிப்பில் சாலைகள்ஆரணி,செப்.2: ரூ6 கோடி மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்வது என்று ஆரணி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரணி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் சசிகலா, மேலாளர் ராமஜெயம், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஆரணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தார் சாலைகள், சிமென்ட், கான்கிரீட் தளம் மற்றும் கப்பிச் சாலை ஆகியவை மொத்தம் ரூ6 கோடி மதிப்பில் 22.98 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்வது. இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து கொடுத்த தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மன்றம் சார்பில் நன்றி தெரிவிப்பது.
புதிய பஸ் நிலையத்திற்கு மேற்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் ரூ50 லட்சம் மதிப்பில் பழக்கடைகளுக்கான வணிக வளாகம் கட்டுவது. ஆரணி நகராட்சிக்கு சொந்தமான ஆற்காடு பாலாறு தலைமை நீரேற்று நிலையத்தில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ25 லட்சம் மதிப்பில் உள்வடி கலன் அமைத்து குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணி மேற்கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.