தினமணி 26.11.2009
குப்பைகள் அகற்ற ஏற்பாடு: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை தினமும் 6 மணி நேரம் மூட முடிவு

சென்னை, நவ.25: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் குப்பைகளை அகற்றி தூய்மையை பராமரிப்பதற்காக, தினமும் 6 மணி நேரம் நுழைவு வாயில்களை மூட சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்தத் திட்டம் டிசம்பர் 1}ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழம் மற்றும் மலர் அங்காடிகளிலிருந்து தினமும் 150 டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் தேங்குகின்றன. இந்த குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. குப்பைகள் அகற்றப்படாததால், கடந்த சில தினங்களாக பெய்த மழையால், மழை நீர் தேங்கி வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது.
புகார்களைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட்டை ஆய்வு செய்த அதிகாரிகள், குப்பைகளை அகற்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் விக்ரம் கபூர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
மொத்த வியாபாரம் நடைபெறும் கோயம்பேடு மார்க்கெட்டில், நாள் முழுவதும் தொடர்ந்து வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் குப்பைகள் அகற்றும் பணிகளை மேற்கொள்வதில் நிர்வாக அடிப்படையில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
எனவே, மார்க்கெட் வளாகத்தின் விற்பனை நேரத்தை முறைப்படுத்தி காய்கறி, பழம் மற்றும் மலர் அங்காடி வளாகங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்த நுழைவு வாயில்களை மூடி, குப்பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காய்கறி அங்காடி நுழைவு வாயில் எண் 7, 9, 14 ஆகியவை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும். காய்கறி அங்காடி நுழைவு வாயில் எண். 5, இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும்.
பழ அங்காடிகள் உள்ள நுழைவு வாயில் எண் 3, 4, 18 ஆகியவை இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடப்படும். இதுபோல் மலர் அங்காடியும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூடி வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.