மாலை மலர் 20.09.2010
மாநகராட்சியின் 6 முகாம்களில் 5,000 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகள் தயார்; 2 மணி நேரத்தில் 535 பேர் ஊசி போட்டு கொண்டனர்
சென்னை, செப். 20- சென்னையில் பரவி வரும் பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. கிண்டி கிங் இன்ஸ் டிடியூட்டில் மட்டுமே முதலில் தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொள்ள அங்கு அதிக அளவில் மக்கள் குவிந்தனர். எனவே பொதுமக்கள் வசதிக்காக சென்னை மாநகராட்சி சார்பில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் ஊசி போடும் பணி நேற்று தொடங்கியது. சைதாப்பேட்டை, சூளை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, திருவான்மியூர், பெரம்பூர் ஆகிய 5 இடங்களில் உள்ள மாநகராட்சி பகுப் பாய்வு கூடங்களில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.
மூக்கின் வழியே செலுத்தும் மருந்துக்கு ரூ.100-ம், ஊசி போட்டுக் கொள்ள ரூ. 200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நேற்று வள்ளுவர் கோட்டம் பகுப்பாய்வு கூடத்தில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 703 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவர்களில் 451 பேர் மூக்கின் வழியாகவும், 252 பேர் கையிலும் ஊசி போட்டுக் கொண்டார்கள்.
அதிக அளவில் கூட்டம் அலைமோதுவதால் தற் போது 5 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் தயாராக உள்ளது. மேலும் தேவைப்பட்டால் உடனடியாக வரவழைக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறினார். இன்று காலையில் இருந்தே மாநகராட்சி 6 தடுப்பூசி மையங்களிலும் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் தடுப் பூசி போடும் பணி தொடங்க வில்லை. பகல் 11 மணிக்குப் பிறகு தடுப்பூசி போடப்பட்டது. 6 மையங்களிலும் 2 மணி நேரத்தில் 535 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று காலை பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிக்கான புதிய விலை பற்றிய அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே ஊசி போடுவது தாமதம் ஆனது என்று ஊழியர் ஒருவர் கூறினார்.