தட்டுப்பாட்டை போக்க 6 லாரிகளில் குடிநீர் :சாய ஆலைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை
ஈரோடு: குடிநீர் தட்டுபாட்டுக்கு மாற்றாக, நான்கு மண்டலங்களில் ஆறு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தேவை உள்ள பகுதிக்கு ஃபோன் செய்தால் குடிநீர் லாரிகள் வரும், என மாநகராட்சி அறிவித்துள்ளது.ஈரோடு மாநகராட்சி, நான்கு மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு தினமும் காவிரி ஆற்றில் இருந்து, 5.40 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மின்தடை, நீர் பற்றாக்குறை, விநியோக பிரச்னையால் தற்போது, மூன்று முதல் சில இடங்களில் ஏழு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.காவிரி ஆற்றில் நீர் இன்றி தற்போது சாயக்கழிவுகள் மட்டுமே தேங்கி உள்ளதால், கலங்கிய நீரையே மக்கள் குடிக்கின்றனர்.
கடுங்கோடை துவங்க உள்ளதால், குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும். தட்டுப்பாட்டை போக்க, மாநகராட்சியின் நான்கு மண்டலத்துக்கும் தலா ஒரு லாரியும், அதிக தட்டுப்பாடு உள்ள பகுதிக்காக இரண்டு லாரியும் ஒதுக்கப்பட்டு, சப்ளை செய்யப்படுகிறது.மாநகராட்சியோடு இணைந்த நகராட்சிகளான சூரம்பட்டி, காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளான சூரியம்பாளையம், பெரிய அக்ரஹாரம், மற்றும் பஞ்சாயத்துகளான கந்தம்பாளையம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது.தற்போது வழங்கப்படும் குடிநீர் முழுவதும் சாய நெடி, மஞ்சள் நிறமாக உள்ளதால், மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். மாநகராட்சி வழங்கும் குடிநீரில் சாயக்கழிவு கலப்பதை, நேரடியாக மாநகராட்சி நிர்வாகமே தலையிட்டு நடவடிக்கை எடுக்காத வரை இதற்கு தீர்வு காண முடியாது.
சுத்தமான பாதுகாப்பான குடிநீர் வழங்க, 423 கோடி ரூபாய் செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் இந்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என மாநகராட்சி எதிர்பார்த்துள்ளது. ஆனால், இத்திட்டத்தில் தற்போது எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால், லாரிகள் மூலம் தீர்வு காண முயல்கிறது.இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது:
மாநகராட்சி குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து, 5.40 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
ஆனால், மாநகராட்சியின் வளர்ச்சி, விஸ்தரிப்பு, மக்கள் தொகைப்படி, 6.70 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக தேவைப்படுகிறது.இருந்தும், பிரச்னை இன்றி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அவசரம் கருதி ஆறு லாரிகள் மூலம் தட்டுப்பாடு மிகுந்த பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்கிறோம். குடிநீர் தேவை அதிகமுள்ள பகுதியினர், ஃபோன் செய்தால் லாரி மூலம் குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரியில் சாயக்கழிவை கலக்கும் சாய ஆலைகள் மீது மாநகராட்சியே நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. கடந்த இரண்டு நாளுக்கு முன் காவிரியில் அலசப்பட்ட சாயத்துணிகளை பறிமுதல் செய்துள்ளோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கடும் விளைவுகளை சாய ஆலைகள் சந்திக்க வேண்டியது வரும். குடிநீரில் சாயக்கழிவுகளை கலப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.