பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘நாடு முழுவதும் தினமும் 15 ஆயிரத்து 343 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 40 சதவீத கழிவுகள் சேகரிக்கப்படுவது இல்லை’ என்று கூறி இருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–
இந்த புள்ளி விவரம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், இந்த தலைமுறையை மட்டுமின்றி அடுத்த தலைமுறையையும் பாதிக்கும். எனவே, நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில், டெல்லி, பெங்களூர், சென்னை, ஆக்ரா, ஜெய்ப்பூர், பரிதாபாத் ஆகிய 6 மாநகராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியை ஆய்வு செய்வோம். மேற்கண்ட 6 மாநகராட்சிகளின் கமிஷனர்களும் 4 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீசு அனுப்பப்படுகிறது. அதுபோல், மத்தியிலும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் 4 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மே 3–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.