விதிமுறை மீறல்:6 கட்டடங்களுக்கு சீல்
தூத்துக்குடியில் விதிமுறையை மீறியதாக 6 கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்கள் உள்ளூர் திட்டக் குழுமத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், போதிய வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் கட்டப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கடந்த மார்ச் 12-ம் தேதி 4 கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அப்போதே, விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவின்பேரில், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலர் ஈஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய அனுமதி பெறாமல் இரண்டாவது மாடி கட்டியிருந்ததாக 2 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதேபோல, உரிய அனுமதி பெறாமல் 4 மற்றும் 5-வது மாடி கட்டப்பட்டிருந்ததாகக் கூறி தனியார் ஹோட்டலில் அந்த இரண்டு மாடிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும், தனியார் வணிக வளாகம், பல்பொருள் அங்காடி, தனியார் ஹோட்டல் ஆகிய மூன்று கட்டடங்களிலும் போதிய பார்க்கிங் வசதி இல்லாமலும், உரிய அனுமதி பெறாமலும் கட்டப்பட்டிருந்ததாக சீல் வைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை குறித்து உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் செயலர் ஈஸ்வரன் கூறியது:
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் முறையாக அனுமதி பெறாத கட்டடங்கள் மீதும், விதிமுறையை மீறிய கட்டடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி நகரில் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் என மேலும், 36 கட்டடங்கள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. 36 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.