6 பேரூராட்சிகளுக்கு 7 மினி லாரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரூராட்சிகளுக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 7 மினி லாரிகளை ஆட்சியர் விஜய் பிங்ளே திங்கள்கிழமை வழங்கினார்.
இதற்கான விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரணமல்லூர், சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம், களம்பூர், தேசூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு இந்த மினி லாரிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.108.50 லட்சம்.
பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் லாரிகளை ஒப்படைத்த ஆட்சியர், இந்த லாரிகளைக் கொண்டு பேரூராட்சிப் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இவ்விழாவில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.விஜயகுமார், பேரூராட்சித் தலைவர்கள் வேணி ஏழுமலை (பெரணமல்லூர்), எம்.ஜி.ராதாகிருஷ்ணன் (சேத்துப்பட்டு), கே.கோவர்தனன் (கண்ணமங்கலம்), மஞ்சுளா மோகன் (தேசூர்) மற்ம் செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.