தினகரன் 20.09.2010
மாநகராட்சி ஏற்பாடு 6 இடங்களில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி முதல் நாளில் 700 பேர் பயன்சென்னை, செப். 20: பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க சென்னையில் 6 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரிலுள்ள சென்னை மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு கூடத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் முகாமை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் மேயர் கூறியதாவது:
பன்றிக்காய்ச்சலை தடுக்க மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர்களை அழைத்து பன்றிக்காய்ச்சலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் மட்டுமே பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்து வழங்கப்படுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், மக்கள் தங்களது பகுதியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
வள்ளுவர் கோட்டம் மாநகராட்சி மருத்துவ பகுப்பாய்வு மையத்தில் கட்டணத்தை செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதுதவிர, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, பெரம்பூர், திருவான்மியூர், சைதாப்பேட்டை, சூளை ஆகிய இடங்களில் உள்ள பகுப்பாய்வு கூடங்களில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியல் கலெக்டரிடம் பெறப்பட்டபிறகு, இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு லட்சம் அச்சிடப்பட்டு, வீடு, வீடாக ஒட்டப்படுகிறது. இவ்வாறு மேயர் கூறினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி, சுகாதாரத் துறை அதிகாரி குகானந்தம், கூடுதல் சுகாதாரத்துறை அதிகாரி தங்கராஜ் உடனிருந்தனர். முகாமில், 451 பேர் மூக்கு வழியாக மருந்து போட்டுக்கொண்டனர். 252 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்று மாநகராட்சி தெரிவித்தது.