தினமலர் 31.12.2009
திருவண்ணாமலை நகராட்சியோடு 6 கிராம பஞ்., இணைப்பு
திருவண்ணாமலை : தி.மலை நகராட்சியோடு வேங்கிகால் உட்பட 6 கிராம பஞ்., இணைக்கப்படுகிறது. சட்டசபை தொகுதி சீரமைப்பால் உள்ளாட்சி அமைப்புகளை மறு சீரமைப்பு செய்து ஒரு யூனியனை சேர்ந்த அனைத்து கிராம பஞ்.,களும் ஒரே சட்டசபை தொகுதிக்கு உட்பட்டதாக இருக்கும் வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தி.மலை நகராட்சியோடு வேங்கிகால், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், மேலத்திகான், நல்லவன்பாளையம் ஆகிய 6 கிராம பஞ்.,களை இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், வேங்கிகால் பஞ்., நகராட்சியோடு இணைக்க கூடாது என்று பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி கலெக்டர் ராஜேந்திரன் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவின்படி வேங்கிகால், அடிஅண்ணாமலை, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், மேலத்திகான், நல்லவன்பாளையம் ஆகிய 6 கிராம பஞ்.,களையும் தி.மலை நகராட்சியோடு இணைக்கலாம் என்று கலெக்டரிடமிருந்து தி.மலை நகராட்சிக்கு இப்போது கடிதம் வந்துள்ளது. இது தொடர்பாக நகராட்சி கவுன்சில்கூட்டத்தின் அடிப் படையில் முடிவு செய்ய வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.