தினகரன் 20.11.2010
மாநகரில் 60 நாட்களில் புதிய சாலை மாநகராட்சி கூட்டத்தில் தகவல்
திருப்பூர், நவ.20: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் வகையில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி திருப்பூர் மாநகரில் ரூ.21.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 11ஆக பிரிக்கப்பட்டு பணிகள் டெண்டர் விடப்பட்டது. இதில் 4 பகுதிகளுக்கு பல்வேறு காரணங்களால் டெண்டர் கோரப்படவில்லை. மீதமுள்ள 7 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. அனைத்து பணிகளுக்கும் மதிப்பீட்டு தொகையை விட 6.62 சதவீதம் முதல் 11.20 சதவீதம் வரை அதிகமாக டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர் தொகையை குறைத்து கொடுக்க ஒப்பந்ததாரர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதை, 2, 3 முறை விலை குறைப்பு செய்யப்பட்டது. அதிலும் மதிப்பீட்டு தொகையை விட 1.96 சதவீதம் முதல் 3.87 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது.
கட்டுமான பொருட்கள் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்கள் கூலி உள்ளிட்ட காரணங்களால் இந்த டெண்டர் தொகைக்கே பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்ற அவசர கூட்டத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது.
மாநகராட்சி மேயர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர் முருகசாமி, ‘’ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சாக்கடை பணிகளில் காலதாமதம், தரமின்மை என பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அதேபோன்று, இதிலும் பிரச்னைகள் எழாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.அந்த திட்டத்தை விட இதில் மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் எப்போது முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்,” என்றார்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர் ஜெயலட்சுமி, “மாநகரில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், பணி உத்தரவு வழங்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் தரத்துடன் நடக்கிறதா என்பது மிகவும் கவனத்துடன் கண்காணிக்கப்படும்,” என்றார். இதையடுத்து தீர்மானங்கள் கவுன்சிலர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மதிப்பீட்டு தொகையை விட 1.96 சதவீதம் முதல் 3.87 சதவீதம் வரை கூடுதல் தொகைக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தொகையை மாநகராட்சி நிதியில் இருந்து செலவிடவும் மாமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.