நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்தும் பணி 60 சதவீதம் நிறைவு
சென்னை:சென்னையில், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், 6.75 கோடி ரூபாய் செலவில், மாநகராட்சி மேற்கொண்டு வரும், நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்தும் பணி, 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.நிதி பற்றாக்குறைசென்னையில் உள்ள நீர் வழித் தடங்களான கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய், அம்பத்தூர் கால்வாய் ஆகியவற்றில் நீரோட்டம் இல்லாமல் போனதுதான், கொசு உற்பத்தி அதிகமானதற்கு காரணம் என, கண்டறியப்பட்டது.
இதனால், அவற்றை தூர் வாரி சுத்தப்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. நிதி பற்றாக்குறையால், இந்த பணிகளை செய்ய முடியாது என, பொதுப்பணித் துறை கூறியது.
இதையடுத்து, மாநகராட்சியே, 6.75 கோடி ரூபாய் செலவில், இந்த நீர் வழித்தடங்களை சுத்தப்படுத்தும் பணியில் இறங்கியது.இரண்டு கட்டங்களாக…
அந்த பணியில், தற்போது, 60 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. அடையாற்றை பொறுத்தவரை, 80 சதவீத பணிகள் முடிந்து உள்ளன.
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகள், இரண்டு கட்டங்களாக நடக்கின்றன.பக்கிங்ஹாம் கால்வாய் சுத்தப்படுத்தும் பணி, மூன்று கட்டங்களாக நடந்து வருகிறது. மற்ற கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இன்னும் ஒரு மாதத்திற்குள், இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் வரும், பருவமழையின் போது நீர் தங்கு தடையின்றி செல்லும். கொசு உற்பத்தி பெருமளவு குறைந்து விடும்’ என்றார்.கூடுதலாக ரூ.73 கோடி ஒதுக்கீடுவெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் மழைநீர் வெளியேறும் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய், வீரங்கால் ஓடை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு, மத்திய அரசின், ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 819.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள், தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த திட்டத்துக்கு, மேலும், 73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.