தினமலர் 30.08.2013
கோவை : கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளில், வரும் அக்., முதல் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத்தொகையை உயர்த்த, கவுன்சில் அனுமதி வழங்கியது. கோவை மாநகராட்சிக்கு பில்லூர்-1, பில்லூர் -2, சிறுவாணி, வடவள்ளி – கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மூலம் பில்லூர் -2 குடிநீர் திட்டம் செயல்படுத்தி, தடையற்ற குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.
தீர்மானம் குறித்து மேயர் விளக்கமளித்தபோது, “”மாநகராட்சியில் குடிநீர் கட்டணம், வைப்புத்தொகை உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பழைய மாநகராட்சி வார்டுகளில் 24 து 7 குடிநீர் திட்டத்திற்கு தீர்மானித்த போது, குடிநீர் கட்டணம் உயர்த்த வேண்டும், பொதுக்குழாய் இணைப்புகள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் நிதியுதவி கிடைத்துள்ளது.
“”அதனால், மாநகராட்சி 60 வார்டுகளில் மட்டும் குடிநீர் கட்டணம், வைப்பு தொகை உயர்த்தப்படுகிறது. கட்டண உயர்வு அக்., முதல் அமலாகும். தென்னிந்தியாவில் 24 து 7 குடிநீர் திட்டம் கோவை மாநகராட்சியில் முதலாவதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரம் செப்., 20ல் கிடைக்க உள்ளது. மாநகராட்சி இணைப்பு பகுதிகளிலும் குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும். இணைப்பு பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை,” என்றார்.
தி.மு.க., கவுன்சிலர் சாமி பேசுகையில், “”மாநகராட்சி பழைய வார்டுகளில் தினமும் குடிநீர் கிடைப்பதில்லை. சிங்காநல்லூரில் ஆறு நாளுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்கிறது. சிங்காநல்லூரில் 8 கோடி ரூபாயில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றி ஒன்றரை ஆண்டுகளாகியும் துவங்கவில்லை. குடிநீர் கட்டணம் உயர்த்தும் நிலையில், மக்களுக்கு திருப்திகரமாக குடிநீர் கிடைக்க உறுதி அளிக்க வேண்டும்” என்றார்.
கட்டணம் எவ்வளவு
- வீட்டு உபயோகத்திற்கான மாதத்துக்கு குறைந்தபட்ச குடிநீர் கட்டணம் (15000 லிட்டர் வரை) 100 ரூபாய்; வைப்புத்தொகை 5000 ரூபாய். அதன்பின், (ஒவ்வொரு ஆயிரம் லிட்டருக்கும்) 20 ஆயிரம் லி., வரை 6 ரூபாய்; அதற்குமேல் 1.5 லட்சம் லி., வரை 8 ரூபாய்; 1.5 லட்சம் லி.,க்கு மேல் 10 ரூபாய்.
- வீட்டு உபயோகத்துக்கான மொத்த இணைப்புக்கு மாதத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 900 ரூபாய்; வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாய். அதன்பின், (ஒவ்வொரு ஆயிரம் லி.,க்கும்) 7500 லி., வரை 5.25 ரூபாய்; 10 ஆயிரம் லி., வரை 6 ரூபாய்; 1.5 லட்சம் லி., வரை 8 ரூபாய்; 1.5 லட்சம் லி., க்கு மேல் 11 ரூபாய் கட்டணம்.
- வீட்டு உபயோகம் அல்லாத இணைப்புக்கு ஒரு மாத குறைந்தபட்ச கட்டணம் 525 ரூபாய்; பொது நிறுவனங்களுக்கான மொத்த இணைப்புக்கு ஒரு மாத குறைந்தபட்ச கட்டணம் 1350 ரூபாய் . இவ்விரு வகை இணைப்புக்கும் (ஒவ்வொரு ஆயிரம் லி.,க்கும்) 7500 லி., வரை 10.50 ரூபாய்; 10 ஆயிரம் லி., வரை 13.50 ரூபாய்; 1.5 லட்சம் லி., வரை 18 ரூபாய்; 1.5 லட்சம் லி.,க்கு மேல் 22.50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.