தினமணி 19.04.2010
600 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
திருவண்ணாமலை, ஏப். 18: பன்றிக் காய்ச்சலை தடுக்கும் பொருட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 600 ஊழியர்களுக்கு முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு சுகாதார மாவட்டங்கள் உள்ளன. கடந்த 2009-ம் ஆண்டு உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் பரவியதால்
ஏராளமானோர் இறந்தனர். இந்தியாவிலும் அதன் பாதிப்பு பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நோயாளிகளிடமும், மக்களிடம் அதிகம் பழகுவதால் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்தும் நோயாளிகளுக்கு இக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார செவிலியர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டது.
அதன்படி திருவண்ணாமலையில் 300 பேருக்கும், செய்யாற்றில் 300 பேருக்கும் முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் போடப்பட உள்ளது.