தினகரன் 09.08.2010
கத்திவாக்கம் நகராட்சியில் ரூ6.22 கோடி திட்டம் முடிந்தும் குடிநீர் கிடைக்காமல் அவதி
திருவொற்றியூர், ஆக. 9: கத்திவாக்கம் நகராட்சியில் பல ஆண்டுகளாக இருந்து வரும் குடிநீர் பிரச்னையை போக்க ரூ6.22 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
நாள் ஒன்றுக்கு 11 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் அளவுக்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டியும் கட்டப்பட்டது. அனைத்து தெருக்களையும் உள்ளடக்கி சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டன. தடையில்லாமல் குடிநீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் நகராட்சியில் வைப்புத்தொகை செலுத்தி வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றனர். ஆனால் குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்து, ஒரு ஆண்டுக்கு மேலாகியும் குழாயில் குடிநீர் வரவில்லை.
உயர் அதிகாரிகள் வரை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. இதனால் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டும் எப்போதும்போல குடிநீர் பிரச்னையால் கத்திவாக்கம் மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து நகராட்சி தலைவர் திருசங்கு கூறுகையில், “மணலி குடிநீர் மையத்திலிருந்து கத்திவாக்கம் வரை குடிநீர் குழாய் 6 அங்குலமாக உள்ளது. இதனால் 11 லட்சம் லிட்டர் குடிநீர் பெறமுடியவில்லை. சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த குழாயை 12 அங்குலமாக மாற்ற வேண்டும். இதற்கு ரூ4.5 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்து விட்டோம். பயன் இல்லை” என்றார்.