தின மணி 23.02.2013
சத்துணவுக் கூடங்களுக்கு ரூ.63 லட்சத்தில் புதிய கட்டடம்
சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மு.ராதா முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் ப.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால் அதனை உடனே சீரமைக்க கவுன்சிலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் அனைத்து கவுன்சிலர்கள் பயிற்சியில் பங்கேற்று அரசு செயல் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது எனத் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், 24 சத்துணவுக் கூடங்களுக்கு புதிய சமையலறைக் கட்டடம் கட்ட அரசு நிதியாக ரூ.51 லட்சத்து 50 ஆயிரம், ஒன்றிய நிதியாக ரூ.11 லட்சத்து 48 ஆயிரம் ஒதுக்கீடு செய்வது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றியக்குழு துணைத் தலைவர் சீனுவாசன், மாவட்டக் கவுன்சிலர் செல்லமுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.