தினமலர் 06.05.2010
ரோடு விரிவாக்கத்துக்கு இடையூறாக கொடிக்கம்பம் : ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கியும் பணிகள் தாமதம்
தாராபுரம் : தாராபுரத்தில் பை–பாஸ் ரோடு அகலப் படுத்தும் பணிக்கு 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், நான்கு மாதமாக ரோடு விரிவாக்க பணிகள் துவக்கப்படாமல் உள்ளன.தாராபுரம் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் முன் செல்லும் பை– பாஸ் ரோட்டை பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அகலம் குறைவாக உள்ள ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத் துள்ள பலரும், கடைகளின் முன்பகுதியில் பந்தல் அமைத்தும், பஞ்சர் கடை உரிமையாளர்கள், பயன்படுத்த முடியாத டயர்களையும் ரோடு வரை அடுக்கி வைத்துள்ளனர்.
மேலும், பஸ் ஸ்டாண்ட் முன் தி.மு.க., – அ.தி.மு.க., – ம.தி.மு.க., – காங்., உட் பட அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்கள், கல்வெட்டுகள் மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்களின் பிளக்ஸ் பேனர்களும் போக்குவரத்துக்கு இடையூறாக, ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது; வாகன ஓட்டிகள், இப்பகுதியில் பயணிக்க மிகவும் சிரமப் படுகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், அமராவதி சிலையில் இருந்து, கொட்டாப்புளிபாளையம் பிரிவு வரை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். இதற்காக, ஆறு மாதங்களுக்கு முன் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி, அனைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் நோட்டீஸ் அனுப் பப்பட்டது.
நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலக் கெடு முடிந்து ஒரு மாதமாகியும் இன்னும் அரசியல் கட்சியினர் தங்கள் கொடிக் கம்பங்களை அகற்றாமல் உள்ளனர். எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும், குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாத ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், பை– பாஸ் ரோடு விரிவாக் கப் பணிக்காக 65 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியும், இன்னும் பணிகள் துவக்கப் படாமல் உள்ளன; போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. பை–பாஸ் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, ரோடு விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.