66வது வார்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
கோவை: கோவை 66வது வார்டில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. கோவை மாநகராட்சி சார்பில், 66வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று சிறப்பு தூய்மை பணி நடந்தது. கண்ணபிரான் மில் சாலையில் நடந்த தூய்மை பணியை மேயர் செ.ம.வேலுசாமி பார்வையிட்டார். கண்ணபிரான் மில் சாலையை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாயை தூர் எடுக்க உத்தரவிட்டார்.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின்கீழ் இவற்றை புதுப்பிக்கவும் ஆணை பிறப்பித்தார். இப்பகுதியில் பாதாள சாக்கடை பணி முடிவடையும் தருவாயில் உள்ளதால், தார்ச்சாலையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து அப்புறப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. கண்ணபிரான் மில் சாலை பகுதியில் கடந்த 50 வருடங்களாக குடியிருக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர், இதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். ஆய்வின்போது, கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ராமமூர்த்தி, மண்டல தலைவர் ஜெயராம், சுகாதார குழு தலைவர் தாமரைச்செல்வி உட்பட பலர் உடனிருந்தனர்.