தினமலர் 31.03.2010
விதிமீறிய கட்டடங்கள் இடிப்பு செலவு ரூ.6.72 கோடி: நகர மன்ற ஒப்புதலுக்கு தீர்மானம்
ஊட்டி : ஊட்டியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 1319 கட்டடங்களை இடிக்க தேவைப்படும் தொகை குறித்த முக்கிய தீர்மானத்தின் முடிவு இன்று எடுக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்தவும், 1993ம் ஆண்டு மாநில அரசால் ‘மாஸ்டர் பிளான்‘ சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் கட்டப்படும் கட்டடங்கள், சில விதிமுறையின் கீழ் தான் கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; உத்தரவு முறையாக பின்பற்றாததால், விதிமீறிய கட்டடங்கள் பெருகின. நீலகிரி மாவட்டத்தில் பெருகும் கட்டடங்களை கட்டுப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில், வக்கீல் யானை ராஜேந்திரன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1,337 கட்டடங்களை, முதற்கட்டமாக இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில், சில கட்டடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அப்பணிகள் நிறுத்தப்பட்டன. மீதமுள்ள கட்டடங்களை இடிக்க தேவையான நிதி நகராட்சியில் இல்லாத காரணத்தால் அப்பணி நிறுத்தப்பட்டதாக, நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இடிப்பு செலவின தீர்மானம்: ஊட்டி நகராட்சியில் இன்று நடக்கும் மாதாந்திர கூட்டத்தில், கட்டடம் இடிப்பு தொடர்பான தீர்மானம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஊட்டி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற கட்டடங்கள் சம்மந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதில், ‘2008ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி மற்றும் பிப்ரவரி 19ம் தேதிகளில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1337 கட்டடங்கள் இடிக்க வேண்டும்,’ என உத்தரவிடப்பட்டது. 1993ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான இந்த கட்டடங்களில் 1319 கட்டடங்கள் இடிமானம் செய்ய 6.72 கோடி ரூபாய் உத்தேச செலவினம் ஏற்படும்; இந்த செலவு தொகையை, நகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்ய இயலாது; இந்த தொகையை சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்ய சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஊட்டி நகராட்சியின் சார்பில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதியன்று நீலகிரி மாவட்ட கலெக்டரால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘ஸ்டேட்ஸ்‘ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதில், கட்டடங்கள் இடிமானம் செய்ய 6.72 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இத்தொகையை ஊட்டி நகராட்சிக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து நான்கு வார காலத்திற்குள் அரசு பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்க வேண்டும்; இந்த நிதியை ஒதுக்கீடு செய்ய ஊட்டி நகரமன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தீர்மானம் மன்ற அனுமதிக்கு வைக்கப்படுகிறது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டட பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் இந்த தீர்மானம் குறித்த முக்கிய விவாதம் இன்றைய நகர மன்ற கூட்டத்தில் நடக்கிறது.