தின மணி 23.02.2013
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டம்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.
நிறும வரி மாற்றியமைப்பு: கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிறும வரியை மாற்றியமைக்கவும் இதற்கான கருத்துகளை பொதுமக்களிடம் பெறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுமக்களிடம் இருந்து எந்தவித ஆட்சேபங்களும் வராத நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நிறுமம் வரியை அமல்படுத்த தேவையான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள அரசை கோர இப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு: தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையத்தை பயன்படுத்திக்கொள்ள புளுகிராஸ் ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்துக்கு 3 ஆண்டுகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கவும், அந்த அமைப்பின் சார்பிலேயே தடுப்பூசி மற்றும் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மலேரியா தடுப்புப் பணியாளர்களை நியமித்தல், பல்வேறு சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், சுரங்கப் பாதைகள் அமைத்தல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.