தினமலர் 31.03.2010
காஞ்சியில் நவீன எரிவாயு தகன மேடை அறிமுகம்: 69 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைப்பு
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன எரிவாயு தகன மேடை 69 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாகி வருகிறது. நவீன எரிவாயு தகன மேடையில் சோதனை ஓட்டமாக, கடந்த 5ம் தேதி அடையாளம் தெரியாத முதியவர் உடல் எரியூட்டப்பட்டது.காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் மயானங்கள் உள்ளன. தினமும் ஏராளமானோர் இறப்பதால் மயானங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று தமிழக அரசின் பகுதி இரண்டு திட்டத்தின் கீழ், பெரியகாஞ்சிபுரம் வெள்ளகுளம் தெருவில் உள்ள சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி முடிவு செய்தது. அரசு, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அத்துடன் நகராட்சி நிதி 27 லட்சம் ரூபாய் சேர்த்து கட்டுமானப் பணி துவக்கப்பட்டது.
தற்போது கட்டடம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. கட்டடம் உள்ளே தரைக்கு மார்பிள் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. எரிவாயு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு உடலை எரிக்க 120 கிலோ விறகு கட்டைகள் தேவைப்படுகிறது. அவற்றை சிறு சிறு துண்டுகளாக்கி எரிவாயு கலனில் போடுகின்றனர். பின், அவற்றுக்கு தீ வைக்கின்றனர். அதே கலனுக்குள் மின்சாரம் உதவியுடன் வேகமாக காற்று செலுத்தப்படுகிறது. விறகு எரியும்போது எழும்பும் கார்பன் மோனாக்சைடு வேகமாக சென்று உடலை எரிக்கிறது. இறுதியில் சாம்பல் மட்டும் மிஞ்சுகிறது.
ஆவி முழுவதும் வெளியேற உயரமான சிம்னி பொருத்தப்பட்டுள்ளது.புதிதாக அமைக்கப் பட்ட எரிவாயு கலனில் உடல் எவ்வளவு நேரம் எரிகிறது என்பதை அறிவதற்காக, கடந்த 5ம் தேதி சோதனை முயற்சி நடந்தது. திருப்போரூர் கோவில் குளத்தில் மூழ்கி இறந்த முதியவர் உடல், போலீஸ் அனுமதியுடன் எரிக்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மகாலட்சுமி தேவி, பொறியாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தில் தியான அறை, குளியல் அறை, கழிப்பிடம், பூங்கா அமைக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வும் கூடுதலாக 22 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணி இன்னமும் துவக்கப்பட வில்லை. தகன மேடை எதிரே உடற்பயிற்சிக் கூடம் ஒன்று மூடிக் கிடக்கிறது. அதை தகனமேடைப் பணியாளர்கள் தங்கும் அறையாக மாற்றவும், குப்பைக் கிடங்கை வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றவும் நகராட்சி முடிவு செய்துள்ளது.
நவீன எரிவாயு தகன மேடையை பராமரிப்பதற்காக சமூக ஆர்வலர்களைக் கொண்ட அண்ணா நூற்றாண்டு நிறைவு நவீன எரிவாயு தகன மேடை அறக்கட்டளை துவக்கப் பட்டுள்ளது. இதன் தலைவராக சண்முகம், செயலராக மகேந்திரகுமார், பொருளாளராக வாசுதேவன், ஒன்பது இயக்குனர்கள், 27 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
அறக்கட்டளை உறுப்பினர்கள் வழங்கும் தொகை மற்றும் நன்கொடையாளர்கள் உதவி யுடன் குறிப்பிட்ட தொகையை வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. அத்தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை பயன்படுத்தி எரிவாயு தகன மேடையைப் பராமரிக்கவும், அமரர் ஊர்தி வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்ததும், உடலை எரியூட்ட எவ்வளவு கட்டணம் வசூலிப்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.ஒரு உடலை எரிக்க குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும். நவீன எரிவாயு தகன மேடை அமைந்துள்ள வளாகத்தில் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.