தினமலர் 23.02.2010
மகளிர் சுயஉதவிக்குழுவினர் தொழில் துவங்க ரூ.7 லட்சம் நிதி
சோழவந்தான்: சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் சிறுதொழில் துவங்க ஏழு லட்சம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் சுவர்ண ஜெயந்தி திட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பல்வேறு சிறுதொழில் துவங்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தில் மார்ச்சில் துவங்குகிறது. சுழல்நிதி, தனிநபர் கடன், குரூப் கடன், சமுதாய கட்டுமான பணிகள், கூலி, வேலைவாய்ப்பு திட்டம் உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கு 30 சதவீதம், சிறுபான்மையினருக்கு 15 சதவீதம், உடல்ஊனமுற்றோருக்கு 5 சதவீதம் என கணக்கெடுக்கப்பட்டு, சிறுதொழில் துவங்க நிதி வழங்கப்படுகிறது. இதற்காக சோழவந்தான் பேரூராட்சிக்கு 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சி நிர்வாக அலுவலர் உமாகாந்தன் கூறுகையில், “”தற்போது மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் பொருளை பிரித்தெடுத்து மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி அளிக்கப்படுகின்றன,” என்றார். பேரூராட்சி தலைவர் கலாவதி, துணைதலைவர் அண்ணாத்துரை, கவுன்சிலர்கள் பெரியசாமி, இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.