தினமலர் 17.05.2010
ஹோப் காலேஜ் பாலத்தை ஜூன் 7க்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர்
கோவை : பீளமேடு, ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணியை ஜூன் 7க்குள் முடிக்குமாறு ரயில்வே அதிகாரிகளை கலெக்டர் உமாநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாடுக்கான கோவை மாநகர மேம்பாட்டு குழு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாநாட்டின் போது இணைப்புச்சாலைகளின் அவசியம் குறித்து விளக்கிய கலெக்டர் உமாநாத், அதன் நிலை பற்றி கேட்டார். குறிப்பிட்ட 3 ரோடுகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டியிருப்பதாக மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சுகுமார் தெரிவித்தார்.
கலெக்டர் பேசுகையில், ”ஒட்டு மொத்தமாக எல்லோரது வீட்டையும் ஒரே நாளில் காலி செய்தால், எல்லோரும் ரோட்டில் நிற்க வேண்டியிருக்கும்; மனிதநேயமின்றி வீடுகளை காலி செய்யக்கூடாது. இப்போதிருந்தே சிறிது சிறிதாக வீடுகளை காலிசெய்ய வேண்டும்,” என்றார்.
மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா பேசுகையில், ”எல்லோருக்கும் ஒரு தேதி கொடுத்து, நோட்டீஸ் கொடுத்து விடலாம். இவர்கள் அனைவருக்குமே, ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் நிரந்தர வீடுகள் கொடுப்பதால், இடத்தை காலி செய்வதில் பெரிய பிரச்னை இருக்காது,” என்றார்.
மசக்காளிபாளையம் ரோட்டை விரிவு படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஓரிரு நாளில் தீர்க்கப்படுமென்று கலெக்டர் தெரிவித்தார். இணைப்புச்சாலைகளை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார். ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, ஜூன் 10க்குள் முடிப்பதாக ரயில்வே நிர்வாக பொறியாளர் செங்கோட்டுவேலன் தெரிவித்தார். அந்த பணியை ஜூன் 7ம் தேதிக்குள் முடித்தால்தான், அந்த வழித்தடத்தில் வாகனங்களை இயக்கி ஒத்திகை பார்க்கவும், தேவையான மாற்றங்களை செய்யவும் சரியாக இருக்கும் என்று கலெக்டர் தெரிவித்தார். அதற்கு முயற்சிப்பதாக ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.
மின்சார வாரியத்தின் சார்பில் புதை மின் வடம் அமைக்கும் பணி, மிகவும் மெதுவாக நடந்து வருவதாக அதிருப்தி தெரிவித்த கலெக்டர், பணி முடிந்த இடங்களிலும் அவற்றை முறையாக மூடாமலிருப்பது ஏன், என்றும் கேள்வி எழுப்பினார். பல ரோடுகளை அகலப்படுத்தியும், டிரான்ஸ்பார்மர் அகற்றாமலிருப்பதால், அந்த ரோடுகளைப் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பிற துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர். குறிப்பாக, அவினாசி ரோடு, சின்னச்சாமி ரோடு, பங்கஜா மில் ரோடு, பாரதியார் ரோடுகளில் இந்த பிரச்னை இருப்பதாக கூறினர். அதிலுள்ள சிரமங்கள் குறித்து, மின் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் பாலகிருஷ்ணன் விளக்கினார்.
திருச்சி ரோடு அகலப்படுத்தும் பணியை விரைவாக முடிக்க அறிவுறுத்திய கலெக்டர், ”ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ், நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் இரண்டு வாரத்தில் சர்வீஸ் ரோடு அமைப்பதாகக் கூறினீர்கள். இரண்டு மாதம் முடிந்தும் வேலை முடியவில்லை,” என்றார். அதற்கு பதில் கூற வேண்டிய அதிகாரிகள் அரங்கில் இல்லை.
காளப்பட்டி பேரூராட்சி பகுதியில், கோவை மாநகராட்சி சார்பில் ‘ஹைமாஸ்‘ விளக்கு அமைக்க 55 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். பங்கஜா மில் ரோட்டில், சாலைத்தடுப்பு (டிவைடர்) அமைத்த பின், அவினாசி ரோட்டில் இருப்பது போலவே, பறவை வடிவிலான விளக்குகளை அமைக்கலாம் என்றும், முடிவெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையிலும் ஓய்வெடுக்காமல் பணியாற்ற வேண்டுமென்று மேயர் வெங்கடாசலம், அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். வணிகவரித்துறை இணை கமிஷனர் ஆனந்த குமார், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர்கள் தங்கமுத்து, வெள்ளியங்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல்., அதிகாரி அதிருப்தி : மாநகர மேம்பாட்டு குழு கூட்டத்தில் பங்கேற்ற பி.எஸ்.என்.எல்., துணை பொதுமேலாளர் ரவீந்திரன் பேசுகையில், ”புதை மின் வடம் அமைக்கும் பணி பற்றி எதுவுமே எங்களிடம் சொல்வதில்லை. முதல் நாள் சொன்னாலும், நாங்கள் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்வோம். பாஸ்போர்ட் அலுவலகம் அருகே, எங்களது கேபிள்களை துண்டித்து எறிந்து விட்டு, அதை மூடி கான்கிரீட் போட்டு விட்டனர். இதனால், பாஸ்போர்ட் அலுவலக டெலிபோன் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டன,” என்றார். அதற்கு மின் வாரிய அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை. எல்லாத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு மேயர் வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.