தினமணி 05.09.2009
நேபாளத்தில் செப்டம்பர் 7ல் தென்கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் மாநாடு
காத்மாண்டு, செப். 4: தென்கிழக்கு ஆசியாவில் மனித சுகாதாரத்தில் பருவநிலை மாறுபாட்டின் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காத்மாண்டில் 27-வது பிராந்திய சுகாதார அமைச்சர்களின் மாநாடு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்புக் குழுவின் 62-வது சந்திப்புக் கூட்டமும் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தியா உள்பட 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இவர்களுடன் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்விரு உயர்நிலைக் கூட்டங்களிலும் உலகம் முழுவதும் பரவியுள்ள தொற்று நோய் காய்ச்சலுக்கான மருந்து தயாரித்தல், தயாரித்த மருந்து நோய் தீர்க்கக் கூடியதாக இருப்பின் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதாரம் குறித்த பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடல்நீர் மட்டம் உயருதல், பனிப்பாறைகள் உருகுதல், திடீர் திடீரென ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் என பருவநிலை மாறுபாடு தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் சுகாதார அமைச்சர்கள் தங்கள் நாடுகளில் உள்ள சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியான சுகாதாரக் கொள்கை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.
சுகாதார அமைச்சர்களின் மாநாட்டைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவன அமைப்பின் பிராந்தியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
செப்டம்பர் மாதம் 7 முதல் 10-ம்தேதி வரை நடைபெற உள்ள மாநாட்டில் இந்தியா, வங்க தேசம், இந்தோனேஷியா, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, வடகொரியா, தாய்லாந்து, பூடான் மற்றும் கிழக்கு தைமூர் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதாரநிறுவனம் தெரிவித்துள்ளது.