தினமலர் 09.06.2010
செம்மொழி மாநாட்டு பணிகள் 7 நாளில் முடியும்! மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உறுதி
கோவை : செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சியில் நடைபெறும் பணிகள் அனைத்தும் வரும் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உறுதி கூறியுள்ளார்.
கோவையில் நடக்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 118 கோடி ரூபாய் மதிப்பில் உள் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகள் நடந்து வருகின்றன. மாநாடு நடக்கும் அவிநாசி ரோட்டை, திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோட்டுடன் இணைக்கும் வகையில் புதிதாக 3 இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி, 13 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. அவிநாசி ரோட்டையும், கொடிசியா வளாகத்தையும் இணைக்கும் வகையில் 60 அடி திட்டச்சாலை, ஒரு கோடியே 59 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகிறது. மொத்தம் 26 கோடியே 31 லட்ச ரூபாய் செலவில், 76 ரோடுகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நகரிலுள்ள 40 “ரிசர்வ் சைட்‘களில் 7 கோடியே 36 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன; பழைய பூங்காக்களும் புதுப்பிக்கப்படுகின்றன. ஐந்து கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பில், நடைபாதை சந்திப்புகளும், 2 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் சாலை சந்திப்புகளும் மேம்படுத்தப்படுகின்றன. புதிதாக 95 விளக்குகளும், நகரில் 19 இடங்களில் உயர் மட்ட கோபுர விளக்குகளும் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுகின்றன.அவிநாசி ரோட்டில் 8, திருச்சி ரோட்டில் 5 என மொத்தம் 13 உயர் மட்ட கோபுர விளக்குகள் அமைக்கப்படுகின்றன. திருச்சி ரோட்டில் ஒரு கோடியே 44 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபாதை அமைக்கப்படுகிறது.ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் நகரிலுள்ள முக்கிய ரோடுகளில் நடைபாதை, சாலையோரப் பூங்கா, வடிகால், மையத் தடுப்புச்சுவர், மின் விளக்குகள், பயணிகள் நிழற்குடை மற்றும் பொது கழிப்பிடங்கள் போன்றவை அமைக்கும் பணி, தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை நிறுவி, பராமரித்து, அரசு அனுமதித்துள்ள அளவில் விளம்பரம் செய்து கொள்ள மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அவிநாசி ரோட்டில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் “பாவர்ஸ்‘ அமைக்கும் பணி நடந்ததால், 500 மீட்டர் தூரத்துக்கு மட்டும் நடைபாதை அமைக்கும் பணி தாமதமாகியுள்ளது. இந்தப் பணி முடிவடையாத காரணத்தால், அவிநாசி ரோட்டில் இன்னும் பணிகள் முடிவடையாததைப் போல் உள்ளது. இதேபோல, நகரின் முக்கியச் சாலைகள் பலவற்றிலும் புதை மின் வடம் அமைத்த பகுதிகளில், குழிகள் மூடப்படாமல் உள்ளன. ஆங்காங்கே மண் குவிந்தும், தனியார் தொலைத் தொடர்பு கேபிள்கள் வெளியில் தெரியும் வகையிலும் கிடப்பதால், சாலைகளை மேம்படுத்தியும், நடைபாதைகளை புதிதாக அமைத்தும் எந்த பயனும் இல்லை. இந்த பணிகள் அனைத்தையும் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி, மேலும் தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றையும் மாநாடு துவங்குவதற்குள் முடிப்பதற்கு, சம்மந்தப்பட்ட ஒப்பந்த ஒறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “”நடைபாதை, பூங்காக்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும். மாநகராட்சி சார்பில் எல்லாப் பணிகளையும் ஜூன் 15க்குள் முடித்து விடுவோம். புதிய பூங்காக்கள் அமைக்கும் பணி தாமதமாவதற்கு செடிகள் நடவுப்பணிகள் இன்னும் முடிவடையாததே காரணம். அவற்றையும் ஜூன் 20க்குள் முடித்து விடுவோம்,” என்றார்.
கொஞ்சம் அந்தப்பக்கம் கவனிக்கலாமே! கோவை மாநகராட்சியில் செம்மொழி மாநாட்டுக்கு அவிநாசி ரோடு, திருச்சி ரோடு ஆகிய 2 ரோடுகளில் மட்டுமே பல கோடி ரூபாயைக்கொட்டி, மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன; நகரில் சில பகுதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, “சவலைப் பிள்ளைகள்‘ போல ஏக்கத்தோடு காட்சியளிக்கின்றன. மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பெரிய கடை வீதியிலேயே நடைபாதை முழுமையாக அமைக்கப்படவில்லை.குறிப்பாக, மாநகராட்சி “வாகன பார்க்கிங்‘ அமைந்துள்ள பகுதியில், சாக்கடை மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் பயமுறுத்துகின்றன. நகரில் பல முக்கிய ரோடுகளில் இரவு நேரங்களில் பெரும்பாலான விளக்குகள் எரிவதில்லை. பல வீதிகளில் குப்பைகள் வாரக்கணக்கில் அள்ளப்படவில்லை. மாநாட்டுக்கு முன்பாக இவற்றையும் சரி செய்தால் நல்லது.