தினகரன் 15.06.2010
மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை ரூ.7 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாமக்கல், ஜூன் 15: நாமக்கல் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தப்பட்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன், துணை வட்டாட்சியர் கதிரேசன் மற்றும் வருவாய்த்துறையினர் நாமக்கல் பேருந்து நிலையம், நந்தவனதெரு பகுதியில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக், மாணிக்சந்த், குட்கா போன்றவை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் நந்தவனதெரு பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகளவில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த பான்பராக், குட்கா போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது காலாவதியான உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் உள்ள கடைகளில் வட்டாட்சியர் சேகர், வட்ட வழங்கல் அலு வலர் சிவக்குமரன் உள்ளிட்ட அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், காலாவதியான உணவுப்பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வட்டாட்சியர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம்.
பள்ளிபாளையம்:
குமாரபாளையத்தில் நகராட்சி ஆணையாளர் மாணிக்கவாசகம் தலைமையில் சுகாதார அதிகாரி இளங்கோ, வருவாய் ஆய்வாளர் தேவகி, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வராஜ், பால சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம்.
இதேபோல்,பள்ளிபாளையத்தில் நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சர்மிளா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த திடீர் சோதனை குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், “நாமக்கல் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைவஸ்துகள் மற்றும் காலாதியான உணவுபண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தின் பிறபகுதிகளான திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலைப்ª பாருட்கள் மற்றும் காலாவதியான உணவுபண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன“ என்றார்.