தினமணி 08.11.2009
மாநகராட்சி முழுவதும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையம்
திருப்பூர், நவ.7: மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், வரி வசூலை தீவிரப்படுத்தவும் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.
திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் என ரூ.35 கோடிக்கும் அதிகமான வரித்தொகை வசூலிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் வரி வசூலை தீவிரப்படுத்தவும், ஒரே இடத்தில் வரி செலுத்துவதால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கவும் 7 இடங்களில் கணினி வரி வசூல் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், குமரன் வணிக வளாகம், தாராபுரம் சாலையிலுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குமார் நகர் நீர்தேக்கத் தொட்டி, புதுராமகிருஷ்ணாபுரம், ராயபுரம் நீர்த்தேக்கத் தொட்டி, பூச்சக்காடு நீர்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் இந்த கணினி வரி வசூல் மையங்கள் செயல்பட உள்ளன.
இந்த வரி வசூல் மையங்கள் சனிக்கிழமை முதல் செயல்பட துவங்கியுள்ளன. இம்மையங்களில் உள்ள கணினிகள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் உடனுக்குடன் வரி வசூல் கண்காணிக்க முடியும் என்றார் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விரைவில் 100 சதவீத வரிவசூல் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.