குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 7 இடங்களில் ஆழ்குழாய்
தஞ்சாவூர் நகராட்சியில் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க 7 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், 22 -வது வார்டில் உள்ள பில்லுக்காரத் தெருவில் ரூ. 4.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் புதன்கிழமை தொடக்கிவைத்தார்.
பின்னர், அவர் தெரிவித்தது:
தஞ்சாவூர் நகரில் வறட்சி நிவாரணத் திட்டப் பணிகள் 2012 – 13 ஆம் ஆண்டு குடிநீர் அபிவிருத்தி பணிகளின் கீழ் இந்த ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, 38 -வது வார்டு பாரதி நகரில் ரூ. 4.40 லட்சம் செலவிலும், 39 -வது வார்டு எலீசா நகர், மருத்துவக் கல்லூரியில் தலா ரூ. 5.50 லட்சம் செலவிலும், 40 -வது வார்டு பாலாஜி நகரில் ரூ. 4.40 லட்சம் செலவிலும், 20 -வது வார்டு சீனிவாசபுரம், 21 -வது வார்டு சேவப்பநாயக்கன்வாரியில் தலா ரூ. 5.50 லட்சம் செலவிலும் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளன.
இதன்மூலம், இப்பகுதிகளில் கோடைகால குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முடியும் என்றார் சாவித்திரி கோபால்.
நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகராட்சிப் பொறியாளர் சீனிவாசன், நகர்மன்றத் துணைத் தலைவர் கே. மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர்கள் அனிதாராணி ராஜா, எம். சுவாமிநாதன், என். சரவணன், எஸ். சுந்தரவடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.