மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்: மனுக்கள் மீது 7 நாள்களில் தீர்வு
தினமணி 21.08.2013
மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்: மனுக்கள் மீது 7 நாள்களில் தீர்வு
மதுரை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் மக்களைத்
தேடி மாநகராட்சி முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களில் சில
மனுக்கள் மீது உடனடியாகவும், பிற மனுக்கள் மீது 7 நாள்களிலும் தீர்வு
காணப்படும் என ஆணையர் ஆர்.நந்தகோபால் தெரிவித்தார்.
மதுரை கிழக்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் மக்களைத் தேடி
மாநகராட்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மண்டலத்துக்குட்பட்ட
வார்டு எண் 50 முதல் 74-வது வார்டு வரையில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு
கோரிக்கைகளுடன் கூடிய மனுக்களை மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, ஆணையர்
ஆர்.நந்தகோபால் ஆகியோரிடம் வழங்கினர்.
இம் மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தலைமை வகித்து
பேசியது: மதுரை மாநகராட்சி பகுதியில் முடிந்தளவு குடிநீர்ப் பிரச்னை
தலைதூக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்திலுள்ள மற்ற மாநகராட்சிகளை விட மதுரை மாநகருக்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்தி கூடுதல் நிதிகளை ஒதுக்கி வருகிறார்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் கிடைத்து
வருகின்றன. இம்மாநகராட்சி பகுதியை சுகாதாரமாக பராமரிக்க தொடர்ந்து
முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
குப்பைகள் எங்கும் தேங்கிவிடாதவாறு தினமும் அகற்றப்பட்டு, வாகனங்கள்
மூலம் வெள்ளைக்கல் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குப்பைகளை
மாநகராட்சி குப்பைத் தொட்டிகளிலோ, தெருக்களில் குப்பை வாகனங்களுடன் வரும்
சுகாதாரப் பணியாளர்களிடமும் குப்பைகளை கொடுத்து, தெருக்களில் குப்பைகள்
கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.,
முகாமுக்கு முன்னிலை வகித்த ஆணையர் ஆர்.நந்தகோபால் பேசியது: மண்டலம்
வாரியாக பொதுமக்களின் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு மக்களைத்
தேடி மாநகராட்சி முகாம் நடைபெற்று வருகிறது. முதல்சுற்று முடிந்து தற்போது
2-வது சுற்று முகாம் துவங்கியுள்ளது. இம்முகாம்களில் கொடுக்கப்படும்
அனைத்து மனுக்களுக்கும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக
நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்,
வரி பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் கொடுத்தால், முகாமிலேயே
தீர்வு காணப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படும். சில கோரிக்கைகள் மீதான
மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக 7 நாள்களுக்குள்
தீர்வு காணப்படும், என்றார்.
முகாமில் 38 பேருக்கு நகர்ப்புற அடிப்படை வீட்டுவசதி திட்டத்தின் கீழ்
ரூ.11.55 லட்சத்துக்கான காசோலைகளும், 6 பேருக்கு கட்டட வரைபட அனுமதியும்,
ஒருவருக்கு சொத்து வரி பெயர் மாற்ற உத்தரவும் வழங்கப்பட்டது.
முகாமில் துணை ஆணையர் (பொறுப்பு) சின்னம்மாள், நகர்நல அலுவலர் யசோதாமணி,
கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரவேல், வரிவிதிப்புக் குழுத்
தலைவர் ஜெயபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், காதர் அம்மாள்,
நூர்முகம்மது, விஜயராகவன், காமாட்சி, வீரக்குமார், சக்திவேல், காசிராமன்,
செல்லம், ஜெயக்குமார், தங்கவேல், ஜெகநாதன், சண்முகவள்ளி, குமார், ஜெயகீதா
மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.