தினமணி 22.07.2010
ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட செல்லூர் காய்கறி மார்க்கெட் திறப்புமதுரை, ஜூலை 21: மதுரை செல்லூரில் மாநகராட்சி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கமிஷனர் பேசுகையில், இந்த மார்கெட்டில் தற்போது 105 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்கெட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரிகளின் வருகையையொட்டி இந்த மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மார்க்கெட் திறப்புக்குப் பின்னர் கடைகளின் செயல்பாடுகளை மேயர், கமிஷனர், மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்ó.
அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், கடைக்கு தினமும் விதிக்கப்பட்டுள்ள வாடகைக்கு மேல் யாரிடமும் கூடுதலாகப் பணம் கொடுத்து ஏமாந்துவிடவேண்டாம் என்று அறிவுறுத்தினார். திறப்பு விழா நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளர் சக்திவேல், கவுன்சிலர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செல்லூர் காய்கறி மார்க்கெட்டின் மொத்தப் பரப்பு 6.50 ஏக்கர். இதில், கடைகள் மட்டும் 6,800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் ஏசி ஷீட் கூரை, கான்கிரீட் தளம், மின் விளக்கு வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.