தினமலர் 16.11.2010
ரூ.70 லட்சம் பாக்கி: காசிபாளையத்துக்கு குடிநீர் “கட்‘
ஈரோடு: சூரம்பட்டி நகராட்சிக்கு குடிநீர் கட்டணம் 70 லட்சம் ரூபாய் பாக்கி வைத்த, காசிபாளையம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகத்தை, நிறுத்தியது.ஈரோடு காவிரியாற்றில் வைராபாளையம் காவிரியாற்றிலிருந்து குடிநீர் எடுத்து, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி பகுதிளுக்கு அன்றாடம் குடிநீர் விநியோகமாகிறது. ஈரோடு மாநகராட்சியை ஒட்டியுள்ள காசிபாளையம் நகராட்சி 21 வார்டுகள் கொண்ட பெரிய நகராட்சியாக உள்ளது. நகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க, வெண்டிபாளையம் காவிரியாற்றிலிருந்து, தண்ணீர் எடுத்து, அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திரித்து, வார்டு பகுதிகளுக்கு விநியோகிக்கிறது.
இது தவிர சூரம்பட்டி நகராட்சி பகுதிக்கு செயல்படுத்தும் குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 28 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.சூரம்பட்டி நகராட்சி குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் பெறும் காசிபாளையம் நகராட்சி, குடிநீர் கட்டணத்தை, நீண்ட காலமாக செலுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டது. சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் செலுத்த கூறி கடிதம் அனுப்பியும், காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை செலுத்தவில்லை. 70 லட்சம் ரூபாய் வரை காசிபாளையம் நகராட்சி நிர்வாகம் பாக்கி வைத்ததால், நேற்று காலை சூரம்பட்டி நகராட்சி நிர்வாகம், காசிபாளையம் பகுதிக்கு குடிநீர் வழங்குவதை நிறுத்தியது.இதையடுத்து, நேற்று காலை 12 மணிக்கு காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியன், செயல்அலுவலர், நகராட்சி இன்ஜினியர் ஆகியோர், சூரம்பட்டி நகராட்சி தலைவர் லோகநாதன், செயல்அலுவலர் மேரியம்மாள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், மாதாந்திரக் கட்டணத்துடன் கூடுதலாக 2.5 லட்சம் ரூபாய் வீதம் செலுத்தி, பாக்கித் தொகையை செலுத்துவதாக காசிபாளையம் நகராட்சி தலைவர் கூறியதையடுத்து, நேற்று காலை மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:சூரம்பட்டி நகராட்சி வழங்கும் குடிநீருக்கான கட்டணத்தை முந்தைய காலத்திலிருந்து செலுத்தாமல், விட்டதால், 70 லட்சம் ரூபாய் வரை பாக்கி உள்ளது. இதை முழுமையாக கட்டாததால், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதை நிறுத்திவிட்டது. தலைவர் மற்றும் செயல்அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாதம் தோறும் செலுத்தும் தொகையில் கூடுதலாக செலுத்துவதாக கூறினோம். இதை ஏற்று மீண்டும் தண்ணீர் திறந்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.