தினமணி 27.06.2013
மாநகராட்சி மன்றக் கூட்டம்: 72 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மொத்தம் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அம்மா உணவகங்களுக்கு தனித்துறை அமைப்பது, நீர்வழிப் பாதைகளில்
வசிப்பவர்களுக்கு கொசு வலை வழங்குவது என்பன உள்ளிட்ட 72 முக்கியத்
தீர்மானங்கள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் 200 மலிவு விலை அம்மா
உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களை மாநகராட்சி சுகாதாரத் துறை
அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை
ஏற்பட்டது.
இந்த நிலையில் அம்மா உணவக திட்ட இயக்குநர் (கூடுதல் சுகாதார அலுவலர்)
தலைமையிலான தனித்துறை (உணவுத்துறை) அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் ரூ.
2.78 கோடி ஒதுக்கப்பட்டு, புதிதாக 111 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
இந்த தனித் துறையில் உள்ள அதிகாரிகள், அம்மா உணவகங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து காண்காணிப்பார்கள்.
கொசு வலை: சென்னையில் நீர்வழிப் பாதைகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு
இலவசமாக கொசு வலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த
நிலையில், கொசு வலைகள் வாங்க நிதி ஒதுக்குவதற்கான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி 5 லட்சம் கொசு வலைகள் ரூ.7.50 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
இதில் முதல்கட்டமாக 78,184 கொசுவலைகள் சுமார் ரூ. 1.17 கோடியில் வாங்க
நிதி ஒதுக்கப்படும். ஒரு கொசுவலையின் விலை ரூ.150 என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானங்கள்
- கூத்தம்பாக்கம் மற்றும் மீஞ்சூர் குப்பை பதனிடுதல் திட்டங்களை
செயல்படுத்த ஒப்பந்தம் கோரியவர்களுக்கு ஒப்பந்தபுள்ளி ஆவணங்கள் வழங்குதல்.
- புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மேம்பாலங்கள், சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை
அமைப்பதற்கான ஆய்வை மேற்கொள்ளவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும்
கலந்தறிதற்குரியவரை நியமித்தல்.
- தெருவிளக்கு கம்பங்கள் வழியாக செல்லும் கேபிள் டிவி வயர்களுக்கு வசூல் செய்யப்படும் தொகையை உயர்த்துதல்.
- பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை கோட்ட அலுவலகங்களிலேயே பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் முறையை அமல்படுத்துதல்.
- 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரும்பினாலான 2,000 குப்பைத் தொட்டிகளை கொள்முதல் செய்தல்.
- மாவட்ட குடும்ப நலத்துறையில் உள்ள 5 மயக்க மருந்து நிபுணர் காலியிடங்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்புதல்.
- மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் பட்டியலில் மாறுதல் செய்தல்.
- அம்மா உணவகங்களை நிர்வகிக்க தனித்துறை ஏற்படுத்தி, அதிகாரிகளை நியமித்தல்.
- முதல்கட்டமாக 78,184 பேருக்கு இலவச கொசு வலைகள் வழங்குதல்.