தினமணி 19.08.2013
மதுரை மாநகராட்சியில் முந்தைய 72 வார்டுகளில் பல
ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றிவிட்டு,
புதிய குழாய்கள் பதிக்க ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில்
ரூ. 247 கோடியில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணையர் ஆர்.
நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மதுரை மாநகராட்சியில்
தமிழக அரசு பரிந்துரையின்பேரில், ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத்
திட்டம் (ஜே.என்.யு.ஆர்.எம்.) அனுமதிக்கப்பட்டு, முதலாவது திட்டம் ஏற்கெனவே
செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் விடுபட்ட பணிகள் தற்போது நடைபெற்று
வருகின்றன.
இத்திட்டத்தின் காலம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ளது. அடுத்த
கட்டமாக, ஜேஎன்யுஆர்எம் 2ஆவது திட்டக் காலம் துவங்கவுள்ளது.
இத்திட்டத்துக்கான பணிகள் தேர்வு செய்யப்பட்டு, விரிவானத் திட்ட அறிக்கை
தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக, மதுரை மாநகராட்சியின் முந்தைய 72
வார்டு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்கள்
பழுதடைந்து, பல்வேறு இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு, உடைப்புகள் மூலம்
குடிநீர் வீணாகி வருகின்றது. அவ்வப்போது உடைப்புகள் சரிசெய்யப்பட்டாலும்,
மீண்டும் மீண்டும் உடைப்புகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், குழாய்கள் முழுவதும்
மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனால், இந்தக் குழாய்களை
ஒட்டுமொத்தமாக மாற்றினால் மட்டுமே மேற்கண்ட வார்டு பகுதிகளில் குழாய்
உடைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுடன், மேடானப்
பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய முடியும் எனக்
கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த 72 வார்டுகளிலும் பழைய குழாய்களை மாற்றிவிட்டு,
புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் திட்டம் ரூ. 247 கோடியில்
தயாரிக்கப்பட்டு, இதற்கு நிபுணர்கள் குழு மூலம் விரிவானத் திட்ட
அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது,
ஜேஎன்யுஆர்எம் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று நிறைவேற்ற நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மாநகராட்சிப் பகுதிகளின் குடிநீர் தேவையை வைகை அணையிலிருந்து
நீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீராக வழங்கும்
வைகை குடிநீர் திட்டங்களின் மூலம் சமாளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள்
பிற தேவைகளுக்கு தங்களின் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகள்
மற்றும் பொது ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படும் நீரின் மூலம்
சமாளிக்கின்றனர்.
கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த நிலையில், மதுரை
மாநகராட்சியில் குடிநீர் தேவையை சமாளிக்க இயலாத நிலை காணப்படுகிறது.
எதிர்காலத்தில் இதன் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மதுரை மாநகராட்சி
பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது. இதன்படி, நீர் நிலைகளான வண்டியூர் கண்மாய், மாடக்குளம்
கண்மாய், வீரமுடையான் முத்துப்பட்டி கண்மாய், எஸ்.கொடிக்குளம் கண்மாய்,
செல்லூர் கண்மாய் போன்றவற்றை தூர்வாரி கரையைப் பலப்படுத்தவும்,
கண்மாய்களைச் சுற்றி சுற்றுலாப் பூங்காக்கள் அமைக்கவும், பாதுகாப்பு வேலி
அமைக்கவும், மேற்படி கண்மாய்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தினமும் 18
மில்லியன் லிட்டர் குடிநீர் எடுப்பதற்கும் ரூ. 147 கோடியில் திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடைபெற்று
வருகிறது. விரைவில், இத்திட்டமும் அரசின் ஒப்புதலைப் பெற்று, ஜவாஹர்லால்
நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று
செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, காவிரி குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியில் புதிதாக
இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்துக்கு தனியாகத் திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு 2ஆவது திட்டத்தில் புதிதாக
இணைக்கப்பட்ட 28 வார்டுகளில் பாதாளச் சாக்கடை அமைத்தல், சாலை மேம்பாடு
போன்ற பணிகள் செயல்படுத்தத் திட்டங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று
வருகிறது.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஜேஎன்யுஆர்எம் 2ஆவது
திட்டத்துக்கான நிதி அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனத்
தெரிவித்தார்.