தினமணி 19.04.2010
அனுமதி இல்லாமல் குடிநீர் எடுத்த75 இணைப்புகள் துண்டிப்பு
சங்ககிரி, ஏப். 18: சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட நாகிசெட்டிபட்டி, நாட்டாம்பாளையம், ஆகிய பகுதிகளில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்காக பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் வட்டாட்சியர் டி.சாந்தி தலைமை வகித்தார். 1வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் பி.தங்கமுத்து வரேவற்றார். நாகிசெட்டிப்பட்டி, நாட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியது (படம்):
÷குடிநீர் குழாயில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராத தொகை வசூலிப்பது என அரசு புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. சங்ககிரி பேரூராட்சியில் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டதன் விளைவாக 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தற்போது நகருக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்
. ÷குடும்ப அட்டை புதுப்பிக்க கோரி வருவாய்த்துறையிடம் விண்ணப்பம் அளித்தவர்களில் சிலர் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். அப்போது ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் அந்த குடும்ப அட்டைகளை தள்ளுபடி செய்து விடுகின்றனர். அவ்வாறு தள்ளுபடி செய்யும் அட்டைதாரர்கள் மேல்முறையீட்டு மனு அளிக்கும்போது அதை அதிகாரிகள் பரீசிலித்து நடவடிக்கை எடுத்தால் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.
÷மேலும், சங்ககிரி பேரூராட்சிக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
÷செயல் அலுவலர் எஸ்.வேதமணி, பேரூராட்சித் தலைவர் டி.என்.அத்தியண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆசைதம்பி, நாட்டாம்பாளையம் முத்துசாமி, திமுக ஒன்றியச் செயலர் ஏ.ராமசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ரத்தினம், கவுன்சிலர்கள் காசிலிங்கம், கே.ஜீ.ஆர்.ராஜவேல், கோகிலா சங்கர், கங்காதேவி வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.