தினமணி 30.08.2013
தினமணி 30.08.2013
மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 75 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் மொத்தம் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி
ஆணையர் விக்ரம் கபூர் முன்னிலை வகித்தார்.
இதில், ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட நாள்களுக்குள் பணிகளை முடிக்காத 2
ஒப்பந்ததாரர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது, சென்னையில்
மேற்கொள்ளப்படும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்ய தரக்கட்டுப்பாட்டு கூடங்கள்
அமைப்பது, தொழில் உரிமம் வசூலிக்க புதிய வழிமுறையைக் கடைப்பிடிப்பது போன்ற
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய தீர்மானங்கள்: கோடம்பாக்கம் மண்டலம், ரங்கராஜபுரம் பிரதான
சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் மலிவு விலை காய்கறிக்
கடைகள் திறக்கவும், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள வணிக வளாக கடைகளுக்கு
வாடகை நிர்ணயம் செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய வெப்பத்தார் இயந்திரம் கொள்முதல் செய்வதற்கான தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேறியது.
சிறப்புத் தீர்மானங்கள்: ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டது,
நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமருக்கு கடிதம்
எழுதியது போன்ற நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி
தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானங்களும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.