தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீள சாலைகளை சீரமைக்க ரூ.152.37 கோடிக்கு ஒப்புதல்
தினமணி 04.07.2013
தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீள சாலைகளை சீரமைக்க ரூ.152.37 கோடிக்கு ஒப்புதல்

தமிழகத்தில் 78 கிலோமீட்டர் நீளச் சாலைகளை சீரமைக்க
ரூ.152.37 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிராமங்களையும், நகரங்களையும் இணைப்பது, பயண நேரம், வாகன இயக்கச் செலவு
ஆகியவற்றைக் குறைப்பது போன்ற நோக்கங்களுடன் ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பை
ஏற்படுத்தி, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில்,
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருச்சி மாவட்டம் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில்,
திருச்சி நகரத்துக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இணைப்பாக 1927 ஆம் ஆண்டு
கட்டப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்துள்ளதால், கனரக வாகனப் போக்குவரத்து
அந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால், திருச்சி-ஸ்ரீரங்கம்
இருவழிப் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நகரின்
ஏனைய பகுதிகளிலும் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்
திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் பழுதடைந்துள்ள இரும்புப்
பாலத்தை மாற்றியமைத்து புதியதாக நான்கு வழி பாலம், அணுகுசாலையில் அய்யன்
வாய்க்கால் குறுக்கே ஒரு சிறுபாலம் மற்றும் சாலை சந்திப்பில் மேம்பாட்டுப்
பணிகள் ஆகியவற்றை ரூ.81 கோடி செலவில் மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா நிர்வாக
அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு: கோடைவாசஸ்தலமாக விளங்கும்
கொடைக்கானலில் சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதின்
அவசியத்தைக் கருத்தில் கொண்டு கொடைக்கானலில் 17 கிலோமீட்டர் நீள சாலைத்
தொடர்களை இடைவழித் தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்துதல், சிறு
பாலங்கள் கட்டுதல், சாலையை ஒட்டி தாங்கும் சுவர் கட்டுதல் போன்ற பணிகளை
ரூ.18.25 கோடி செலவில் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணம் நகரை எளிதில் அடைய வசதியாக
விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில், காவிரி ஆற்றின் குறுக்கே
பாலக்கரையில் அமைந்துள்ள பாலம் பழுதடைந்துள்ளதால் அந்தப் பாலத்தில் இப்போது
போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு பாலம் வழியாக சுற்றி
விடப்படுகிறது. இதனால் காலவிரயம் மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது. எனவே,
அந்தப் பாலத்தினை ரூ.5 கோடி செலவில் புதுப்பித்து மீண்டும் கட்டப்படும்.
சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களைக் தவிர்க்கும் வகையில்
சேலம் நகரிலுள்ள ஐந்து ரோடு சாலை சந்திப்பு மற்றும் குரங்குச் சாவடி
சந்திப்பு ஆகிய இடங்களில் சாலை மேம்பாலங்கள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார். இந்தச் சாலை மேம்பாலங்கள் அமைக்க விரிவான திட்ட
அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பழுதடைந்துள்ள 42 கிலோமீட்டர் சாலைகளை ரூ.86.45
கோடியிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 36.80 கிலோமீட்டர்
சாலைகளை ரூ.65.92 கோடியிலும் சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா நிதி ஒதுக்கி
நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளார்.
மொத்தத்தில், தமிழகத்தில் ரூ.152.37 கோடி செலவில் 78.80 கிலோமீட்டர்
நீளமுள்ள சாலைகளை சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி
உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.