தினமலர் 05.01.2010
கோவை நகரிலுள்ள 8 குளங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைப்பு
கோவை : கோவையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் இருந்த எட்டு குளங்கள், 90 ஆண்டு குத்தகை அடிப்படையில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன.கோவை மாநகராட்சி எல்லைக்குள் கிருஷ்ணாம்பதி குளம், செல்வாம்பதி குளம், முத்தண்ணன் குளம், பெரியகுளம், நரசம்பதி குளம், செல்வசிந்தாமணி குளம், வாலாங்குளம் மற்றும் சிங்காநல்லூர் குளம் உள்ளது. இதுவரை, இக்குளங்களை பொதுப்பணித்துறை பராமரித்து வந்தது. இவற்றை குத்தகை அடிப்படையில் மாநகராட்சி வசம் வழங்க வேண்டும், என்று கோவை மாநகராட்சி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு மேற்கண்ட எட்டு குளங்களையும் 90 ஆண்டு குத்தகைக்கு கோவை மாநகராட்சி வசம் ஒப்படைத்துள்ளது. இக்குளங்கள், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்பு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. மழைநீர் சேகரிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மேலும், குளங்கள் சீரமைக்கப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் குளக்கரைகளை ஒட்டியுள்ள பகுதியில் நடைபாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி மாநகருக்கு அழகு சேர்க்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.