தினமணி 08.02.2010
ரூ. 8 லட்சம் செலவில் பூங்கா புனரமைப்பு
பழனி, பிப். 7: பழனி ராஜகோபால் பூங்கா சுமார் ரூ.8 லட்சம் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: பழனி 13-வது வார்டில் உள்ள ராஜகோபால் பூங்கா, 9.3.58ல் பேரறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இப்பூங்கா பராமரிப்பின்றி உள்ளதால், இதை ரூ.7.87 லட்சம் செலவில் புனரமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைக்கு உள்பட்ட சுற்றுலாத் துறை மூலம் பெறும் நிதியைக் கொண்டு இப்பணி நடத்தப்படவுள்ளது. மேலும் சுற்றுலாத் துறை நிதி மூலம் பழனி டவுன் காளிமுத்து நகரில் உள்ள நகராட்சி பூங்கா ரூ.10.61 லட்சம் செலவிலும், உழவர் சந்தை அருகே உள்ள நகராட்சி பூங்கா ரூ.6.71 லட்சம் செலவிலும், ராஜா நகர் பூங்கா ரூ.10.61 லட்சம் செலவிலும் புனரமைக்கப்பட உள்ளது.
நகராட்சி மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சுற்றுலாத் துறை மூலம் நிதி வழங்க ஏற்பாடு செய்த ஆட்சியருக்கு நகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.