தினமணி 11.03.2010
8 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி தேர்தலை சந்திக்கும் பெங்களூர் வாக்காளர்கள்
பெங்களூர், மார்ச் 10: 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது.
கடைசியாக பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் இருந்தன.
÷அந்த மாநகராட்சி மன்றத்தின் பதவிக்காலம் 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பிறகு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. ÷
தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுக்காததற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது பெங்களூர் மாநகராட்சி மன்றத்துடன் நகரைச் சுற்றியுள்ள 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 110 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டதையாகும். இவை சேர்க்கப்பட்டதும் வார்டுகள் எண்ணிக்கை அதிகமானது.
÷100 வார்டுகளாக இருந்த மாநகராட்சியை வார்டுகளின் எண்ணிக்கையை 148 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு ஏற்ப வார்டு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன்படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க முயன்றபோது வார்டுகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை உள்ளது எனக் கூறி அதைக்குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது
. இதையடுத்த 148 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கையை 198 ஆக பிரிக்கப்பட்டது.
இதற்கிடையே பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ÷
அந்த வழக்குகளில் மாநராட்சி தேர்தலை குறிப்பிட்ட நாளைக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் 8 முறை உத்தரவிட்டுள்ளது. இந்த 8 முறையும் அரசு பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது.
÷குறிப்பாக பலத்த மழை, வெள்ளம், சட்டப்பேரவை தேர்தல், மக்களவை தேர்தல் என பல தேர்தல்களை காரணம் காட்டியது. இறுதியாக தேர்தலை 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாத்ததிற்குள் நடத்தியே தீர வேண்டும் என கண்டிப்பான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தது. பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என கடந்த டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. இதையடுத்து வார்டு இட ஒதுக்கீடு பட்டியலை அரசு வெளியிட்டது. ÷
அந்தப் பட்டியல் முறைப்படி இல்லை. தாழ்த்தப்பட்டோர் அதிகம் உள்ள வார்டுகள் பொது வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு வேண்டும் என்றே தங்களுக்குச் சாதமான வார்டுகளை பொதுப் பட்டியலில் சேர்த்துள்ளது என்று கூறி காங்கிரஸ் கட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
÷அந்த வழக்கிலும் 2 வாரத்திற்குள் சரியான பட்டியலை வெளியிட்டு அறிவித்தபடி பிப்ரவரி 21-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிலர் அரசு அறிவித்த பட்டியல் படியே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கிடையே தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி அரசும் உச்சநீதிமனன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ÷ஆனால் எதையும் ஏற்காத உச்சநீதிமன்றம் ஏதாவது குறை இருந்தால் உயர்நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என திட்டவட்டமாகக்கூறிவிட்டது.
÷இதையடுத்து அரசு சார்பில் தேர்தலை நடத்த மே 15-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எஸ்எஸ்எல்சி, பியூசி தேர்வுகள் நடக்க இருப்பதால் இந்த கால அவகாசத்தை வழங்க வேண்டும் என கோரப்பட்டது.
ஆனால் இதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேவையானால் தேர்வை தள்ளிவையுங்கள், அறிவித்தபடி தேர்தலை நடத்துங்கள் எனத் திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி கால அவகாசம் கேட்க அங்கும் மார்ச் 6-ம் தேதி அரசு சிறப்பு ரிட்மனு தாக்கல் செய்தது. ஆனால் பல்வேறு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அந்த மனுவை விசாரணைக்கு முன்பே அரசு வாபஸ் பெற்றது. ÷ இதையடுத்து தேர்தல் ஆணையம் அறிவித்த தேதியில் தேர்தலை நடத்த அரசு அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.
எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் மீண்டும் ஓர் தடை ஏற்பட்டது.
ஜெயின் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மார்ச் 8-ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 28-ம் தேதி மகாவீர் பிறந்தநாள் விழா. அன்று பொதுவிடுமுறையாகும். எனவே தேர்தலை தள்ளிவிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இது மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்குவந்தது. அப்போது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி மன்றத்துக்கு மார்ச் 28-ம் தேதி தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் மார்ச் 8-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.